தர்மபுரி
தர்மபுரியில் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் கலெக்டர் திவ்யதர்சினி தொடங்கி வைத்தார்
|தர்மபுரியில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த மருத்துவ முகாமினை கலெக்டர் திவ்யதர்சினி தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
தர்மபுரி:
தர்மபுரியில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த மருத்துவ முகாமினை கலெக்டர் திவ்யதர்சினி தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
மருத்துவ முகாம்
தர்மபுரி நகராட்சி மற்றும் தர்மபுரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் நலத்திட்டங்கள் மற்றும் உதவி உபகரணங்கள் பெறுவதற்காக மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த மருத்துவ முகாம் தர்மபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இந்த முகாமை கலெக்டர் திவ்யதர்சினி குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
அப்போது கலெக்டர் கூறியதாவது:-
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நலத்திட்டங்கள் மற்றும் உதவி உபகரணங்கள் பெறுவதற்காக மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த மருத்துவ முகாம் மாவட்டம் முழுவதும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. முதல் கட்டமாக தர்மபுரி நகராட்சி மற்றும் தர்மபுரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் இந்த ஒருங்கிணைந்த மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது.
இந்த முகாமில் முடநீக்கு, காது, மூக்கு, தொண்டை, கண், மனநல மருத்துவர்கள் கலந்து கொணடு ஆலோசனை வழங்கவும், பரிசோதனைகள் மேற்கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அடையாள அட்டை
மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை பதிவு மற்றும் நலவாரிய பதிவு செய்தல், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் பராமரிப்பு உதவித்தொகை, வங்கி கடன் மானியம், உதவி உபகரணங்கள், கல்வி உதவித்தொகை, சுயஉதவி குழுக்கள் மூலம் கடனுதவி உள்ளிட்ட பல்வேறு கடனுதவிகள் பெறுவதற்கும் இந்த மருத்துவ முகாம்கள் பயனுள்ளதாக இருக்கும். இந்த முகாமை மாற்றுத்திறனாளிகள் நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் கூறினார்.
இந்த முகாமில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பாபு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் செண்பகவள்ளி, தாசில்தார் ராஜராஜன், பள்ளி தலைமை ஆசிரியை தெரசாள் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள், டாக்டர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.