அரியலூர்
மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம்
|மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடைபெற்றது.
அரியலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி இணைந்து நடத்திய மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த மருத்துவ மதிப்பீட்டு முகாம் மற்றும் உதவி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி திருமானூரில் நடந்தது. முகாமிற்கு திருமானூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் காமராஜ், வட்டார வள மைய மேற்பார்வையாளர் ஜெயபாரதி, முடநீக்கியல் வல்லுனர் ஜெயராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருமானூர் ஊராட்சி மன்ற தலைவர் உத்திராபதி, துணைத் தலைவர் மணிமாறன் ஆகியோர் தலைமை தாங்கினர். முகாமில் எலும்பு மூட்டு, மனநலம், காது, மூக்கு, தொண்டை, கண் உள்ளிட்ட சிகிச்சைகளுக்கு சிறப்பு மருத்துவ நிபுணர்கள் மாற்றுத்திறனாளி மாணவர்களை மதிப்பீடு செய்தபின் அவர்களுக்குரிய சிகிச்சையளித்து உதவி உபகரணங்கள் தேவைப்படும் குழந்தைகளுக்கு உதவி உபகரணங்களைப் பெற பரிந்துரை செய்தனர். மேலும் இம்முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய மற்றும் மாநில அடையாள அட்டை, ஆதார் அடையாள அட்டை, முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்ட அடையாள அட்டை ஆகியவையும் வழங்கப்பட்டன. இதில் திருமானூர் ஒன்றியத்தை சேர்ந்த 122 மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். வட்டார கல்வி அலுவலர்கள் எழிலரசி, பரிமளம், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தமிழ்ச்செல்வி ஆகியோர் முகாமை ஒருங்கிணைத்து நடத்தினர். முகாமிற்கான ஏற்பாடுகளை வட்டார ஒருங்கிணைப்பாளர் மோகன், ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் சிறப்பாசிரியர்கள் செய்திருந்தனர்.