விருதுநகர்
மருத்துவ மதிப்பீட்டு முகாம்
|கல்குறிச்சியில் மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடைபெற்றது.
காரியாபட்டி,
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்திட்டம் சார்பில் காரியாபட்டி ஒன்றியம் கல்குறிச்சி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் மாவட்ட கலெக்டர் வழிகாட்டுதலின் படி மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடைபெற்றது. முகாமினை விருதுநகர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ராமன், மாவட்ட உதவித்திட்ட ஒருங்கிணைப்பாளர் சிவசக்தி கணேஷ்குமார், காரியாபட்டி யூனியன் துணைத்தலைவர் ராஜேந்திரன் மற்றும் கல்குறிச்சி ஊராட்சி மன்றத்தலைவர் கணேசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். முகாமில் 18 வயது வரையிலான மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளின் மனவளர்ச்சி, கண்பார்வை, செவித்திறன், உடல் இயக்க குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு சிறப்பு டாக்டர்களால் ஊனத்தின் அளவு மதிப்பீடு செய்யப்பட்டு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. மேலும் இம்முகாமில் கலந்து கொண்டு அடையாள அட்டை பெற்றவர்களுக்கு துறை சார்பில் உதவி உபகரணங்கள், உதவித்தொகை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. 82 நபர்கள் கலந்து கொண்ட முகாமில் மருத்துவ உபகரணங்கள் பெறுவதற்கு தேவையான காப்பீட்டுத்திட்டம், பஸ், ெரயில் பாஸ் வழங்கப்பட்டது. இதில் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலரால் 31 புதிய மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது. முகாமில் மாவட்ட புள்ளியியல் அலுவலர், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், வட்டார ஒருங்கிணைப்பாளர், ஆசிரியர் பயிற்றுனர்கள், சிறப்பு ஆசிரியர்கள், இயன்முறை மருத்துவர்கள், இல்லம்தேடி கல்வி திட்ட தன்னார்வலர்கள், அலுவலகப்பணியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முகாமிற்கான ஏற்பாடுகளை வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) ராஜேஷ் பாபு செய்திருந்தார்.