< Back
மாநில செய்திகள்
மருத்துவ மாணவர் சேர்க்கை: கலந்தாய்வு நடத்தும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் -ராமதாஸ் வலியுறுத்தல்
மாநில செய்திகள்

மருத்துவ மாணவர் சேர்க்கை: கலந்தாய்வு நடத்தும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் -ராமதாஸ் வலியுறுத்தல்

தினத்தந்தி
|
9 May 2023 2:22 AM IST

அனைத்து மருத்துவ இடங்களுக்கும் கலந்தாய்வு நடத்தும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையைப் பொறுத்தவரை அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள், மத்திய அரசின் மருத்துவக்கல்வி நிறுவனங்கள், தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றுக்கான மாணவர் சேர்க்கையை மட்டும் மருத்துவ சேவைகளுக்கான தலைமை இயக்குனர் அலுவலகம் மூலம் மத்திய அரசு நடத்தி வருகிறது. மீதமுள்ள இடங்களுக்கான மாணவர் சேர்க்கை மாநில அரசுகள் மூலமாகவே நடத்தப்பட்டு வருகின்றன.

ஆனால், நடப்பாண்டு முதல் அனைத்து இடங்களுக்கும் மத்திய அரசின் மருத்துவ சேவைகள் தலைமை இயக்குனர் அலுவலகமே மாணவர் சேர்க்கை கலந்தாய்வை நடத்தும் என்றும், அதற்கு மாநில அரசுகள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்காக மத்திய அரசு தெரிவித்துள்ள காரணம் ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இல்லை. மாணவர் சேர்க்கையை தடையின்றி நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்யும்படி பல்வேறு நீதிமன்றங்கள் ஆணையிட்டதன் அடிப்படையில், அனைத்து மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்களுக்கும் நேரடியாக மாணவர் சேர்க்கை நடத்த தீர்மானிக்கப்பட்டிருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. இது எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாத வாதம் ஆகும்.

தமிழ்நாட்டுக்கு பாதிப்பு

மாணவர் சேர்க்கைகள் மாநில அளவில் நடத்தப்படுவது தான் சிக்கல் இல்லாமல் இருக்கும். ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு வகையான இட ஒதுக்கீட்டு முறை பின்பற்றப்பட்டு வருகிறது. மத்திய அரசு நடத்தும் மாணவர் சேர்க்கையிலும் அதே இடஓதுக்கீட்டு முறைதான் கடைபிடிக்கப்படும் என்றாலும் கூட, 28 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் அந்தந்த மாநிலத்தின் இடஒதுக்கீட்டு முறையைக் கடைபிடித்து மத்திய அரசே கலந்தாய்வை நடத்துவது சாத்தியமல்ல. அதனால் ஏராளமான குழப்பங்களும், முறைகேடுகளும் நடப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன. தமிழ்நாட்டுக்குக் கிடைக்க வேண்டிய இடங்களை பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பறித்துச்செல்லும் வாய்ப்புள்ளது.

'நீட்' என்ற பெயரில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தகுதியை தீர்மானிக்கும் உரிமையை மத்திய அரசு பறித்துக் கொண்டது. அடுத்தக்கட்டமாக மாணவர் சேர்க்கை கலந்தாய்வை நடத்தும் உரிமையையும் மத்திய அரசு பறித்துக் கொண்டால், இனி வரும் காலங்களில் தமிழ்நாடு மருத்துவக்கல்லூரிகளில் இந்தியாவின் எந்த மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களும் சேரலாம். அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் மத்திய அரசின் இட ஒதுக்கீடே கடைபிடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இது தமிழ்நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

ரத்து செய்யவேண்டும்

ஒருபுறம் கூட்டுறவு கூட்டாட்சி தத்துவம் பேசிக்கொண்டு படிப்படியாக மாநில அரசின் உரிமைகளை மத்திய அரசு பறிப்பது நியாயமற்றது. எனவே, அனைத்து மருத்துவ இடங்களுக்கும் கலந்தாய்வு நடத்தும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும். இப்போதுள்ள மாணவர் சேர்க்கை கலந்தாய்வு முறையே தொடருவதை உறுதிசெய்ய வேண்டும். இன்றைய சூழலுக்கு பொருத்தமற்ற அனைத்திந்திய தொகுப்பு முறையை ரத்து செய்யவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்