திருப்பூர்
முத்துக்குமாரசாமி கோவிலில் மருத்துவக் கழிவுகள்
|காங்கயம் அருகே வட்டமலை முத்துக்குமாரசாமி கோவிலில் மருத்துவக் கழிவுகள் வீசப்பட்டுள்ள சம்பவம் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காங்கயம் அருகே வட்டமலை முத்துக்குமாரசாமி கோவிலில் மருத்துவக் கழிவுகள் வீசப்பட்டுள்ள சம்பவம் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவக்கழிவுகள்
காங்கயம், தாராபுரம் சாலையில் உள்ள வட்டமலையில் பிரசித்தி பெற்ற முத்துக்குமாரசாமி கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த மலைக் கோவிலில் தினசரி பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.
இந்த நிலையில் கோவிலில் உள்ள 16 கால் மண்டபம் பகுதியில் ஆயிரக்கணக்கான பயன்படுத்தப்பட்ட ஊசி சிரஞ்சுகளும், மருந்துப்பாட்டில்களும் மருத்துவக்கழிவுகளும் குவியல் குவியலாக போடப்பட்டு சிதறிக் கிடக்கின்றன. இவற்றை யார் இங்கு கொண்டு வந்து போட்டனர் என்பது தெரியவில்லை. இதனால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
காவலரை நியமிக்க வேண்டும்
இதுபற்றி பக்தர்கள் கூறியதாவது:-
மிகவும் பழமை வாய்ந்ததும் பிரசித்தி பெற்றதுமான இந்த கோவில் அடிவாரத்தில் உள்ள மண்டபம் பகுதிகளில் இரவு நேரங்களில் மதுப்பிரியர்கள் மதுப்பாட்டில்களை வாங்கி வந்து குடித்துவிட்டு பாட்டில்களை வீசிச் செல்வது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு கோவிலின் புனிதத்தை கெடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் மருத்துவக் கழிவுகளை கொட்டிச்சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற அவலங்களுக்கு காரணம் கோவிலுக்கு காவலர் இல்லாததே. எனவே உடனடியாக 24மணி நேரமும் காவலரை நியமனம் செய்ய கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.