< Back
மாநில செய்திகள்
துப்பாக்கி சுடும் போட்டியில் வெற்றி பெற்ற 96 பேருக்கு பதக்கங்கள்
திருச்சி
மாநில செய்திகள்

துப்பாக்கி சுடும் போட்டியில் வெற்றி பெற்ற 96 பேருக்கு பதக்கங்கள்

தினத்தந்தி
|
17 April 2023 1:02 AM IST

துப்பாக்கி சுடும் போட்டியில் வெற்றி பெற்ற 96 பேருக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டன.

துப்பாக்கி சுடும் போட்டி

திருச்சி மாநகர கே.கே.நகர் ஆயுதப்படை வளாகத்தில் உள்ள மாநகர ரைபிள் கிளப்பில் முதன் முறையாக மாவட்ட அளவிலான ஏர் பிஸ்டல் மற்றும் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 2 நாட்கள் நடைபெற்றது. இதில் திருச்சி மாவட்டத்தில் உள்ள ரைபிள் கிளப்பில் துப்பாக்கி சுடுதலில் பயிற்சி பெற்ற சுமார் 290 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

10 மீட்டர் சுடுதளத்தில் ஏர் பிஸ்டல் மற்றும் ஏர்ரைபிள் பிரிவில் சிறியவர்கள், இளைஞர்கள், முதியவர்கள் என்றும், ஆண்கள், பெண்கள் பிரிவு என்றும் தரம் பிரிக்கப்பட்டு, சப்-யூத், யூத், ஜூனியர், சீனியர், மாஸ்டர் மற்றும் சீனியர் மாஸ்டர் ஆகிய பிரிவுகளில் 32 போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த போட்டியில் மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. கார்த்திகேயன் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் தங்கப்பதக்கம் வென்றார்.

சாம்பியன் பட்டம்

இதைத்தொடர்ந்து வெற்றி பெற்றவர்களுக்கு நேற்று பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் சத்தியபிரியா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற 32 பேருக்கு தங்கப்பதக்கமும், 32 பேருக்கு வெள்ளிப்பதக்கமும், 32 பேருக்கு வெண்கல பதக்கமும் என்று 96 பேருக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.

மேலும் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்ற திருச்சி ரைபிள் கிளப்புக்கு சுழற்கோப்பையை கமிஷனர் வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில் திருச்சி ரைபிள் கிளப் ஒருங்கிணைப்பு செயலாளர் செந்தூர்செல்வன், நிர்வாகக்குழு உறுப்பினர் இளமுருகன் மற்றும் கிளப்பின் தலைமை அதிகாரி சந்திரமோகன் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்