< Back
மாநில செய்திகள்
சாந்தனின் உடலை இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் - தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
மாநில செய்திகள்

'சாந்தனின் உடலை இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்' - தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

தினத்தந்தி
|
29 Feb 2024 3:50 PM IST

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளை நியமித்து தேவையான நடவடிக்கைளை மேற்கொள்ள வேண்டும் என ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சாந்தன், நளினி உள்ளிட்ட 26 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இதனிடையே நீண்ட போராட்டத்திற்கு பிறகு கடந்த 2022-ம் ஆண்டு சாந்தன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

சாந்தன் இலங்கை தமிழர் என்பதால் திருச்சியில் உள்ள சிறப்பு முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து இலங்கையில் உள்ள தனது தாயாரை சந்திப்பதற்காக அங்கு செல்வதற்கு அனுமதி வழங்குமாறு இலங்கை அரசுக்கு சாந்தன் கடிதம் எழுதினார். இலங்கை தூதரக அதிகாரிகளிடம் அனுமதி பெற்ற பிறகு சாந்தன் அந்த நாட்டுக்கு அனுப்பப்படுவார் என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் சாந்தனுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் உயர் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த சாந்தன், சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார். அவருக்கு வயது 55.

முன்னதாக சாந்தன் தன்னை இலங்கை அனுப்ப உத்தரவிடக்கோரி சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி சுரேஷ் குமார், நீதிபதி குமரேஷ் பாபு ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சாந்தனை இலங்கைக்கு அனுப்ப ஜனவரி 22-ந்தேதியே அனுமதி அளிக்கப்பட்டதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், மத்திய அரசு அனுமதி அளித்த பிறகும் சாந்தனை ஏன் இலங்கைக்கு அனுப்பவில்லை என தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த தமிழக அரசு வழக்கறிஞர், "ஜனவரி 24-ந்தேதி முதலே சாந்தன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தொடர்ந்து 27-ந்தேதி ஏர் ஆம்புலன்ஸ் மூலம் அவரை இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்த நிலையில், மாரடைப்பால் அவர் உடல்நிலை மோசமானது" என்று விளக்கம் அளித்தார்.

தமிழக அரசின் விளக்கத்துக்கு பின் தீர்ப்பளித்த நீதிபதிகள், "சாந்தனின் உடலை இலங்கை கொண்டு செல்ல தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளை நியமித்து தேவையான நடவடிக்கைளை மேற்கொள்ள வேண்டும். இலங்கை தூதரக அனுமதி, இறப்புச் சான்று உள்ளிட்டவற்றை பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்றியது குறித்து மார்ச் 4-ந்தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்" என்று உத்தரவிட்டனர்.



மேலும் செய்திகள்