< Back
மாநில செய்திகள்
விவசாய நிலங்களில் நடைபெறும் திருட்டை தடுக்க நடவடிக்கை
விருதுநகர்
மாநில செய்திகள்

விவசாய நிலங்களில் நடைபெறும் திருட்டை தடுக்க நடவடிக்கை

தினத்தந்தி
|
25 Jun 2022 1:25 AM IST

விவசாய நிலங்களில் நடைபெறும் திருட்டை தடுக்க போலீசார் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் குறைதீர்க்கும்நாள் கூட்டத்தில் கலெக்டர் மேகநாத ரெட்டி கூறினார்.

விவசாய நிலங்களில் நடைபெறும் திருட்டை தடுக்க போலீசார் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் குறைதீர்க்கும்நாள் கூட்டத்தில் கலெக்டர் மேகநாத ரெட்டி கூறினார்.

குறை தீர்க்கும் நாள் கூட்டம்

விருதுநகர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் மேகநாத ரெட்டி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். வைப்பாற்றின் குறுக்கே நென்மேனியில் பாலம் சேதம் அடைந்து விட்டதால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

சாத்தூரில் இருந்து ஏழாயிரம் பண்ணை வழியாக கோவில்பட்டிக்கு இரவுநேர பஸ் இயக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டதால் விவசாயிகள் கோவில்பட்டியில் இருந்து இடு பொருட்கள் வாங்க முடியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே இந்த பஸ்சை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கண்காணிப்பு

இதனை தொடர்ந்து கலெக்டர் மேகநாதரெட்டி கூறியதாவது:- விவசாயிகளின் கோரிக்கையின்படி விவசாய நிலங்களில் நடைபெறும் திருட்டுகளை தடுக்க போலீசார் மூலம் தனி குழுக்கள் அமைக்கப்பட்டு தொடர் கண்காணிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வனத்துறை மூலம் கடந்த நிதியாண்டில் வன விலங்குகளால் பாதிக்கப்பட்ட 53 விவசாயிகளுக்கு நிவாரண தொகை வழங்கப்பட்டுள்ளது.

அனைத்து விவசாயிகளும் விவசாய கடன் அட்டை பெற்றுக் கொள்ளும் வகையில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டு விவசாய கடன் அட்டை வழங்கப்பட்டு வருகிறது.

கொள்முதல் நிலையம்

நேரடி கொள்முதல் நிலையங்களில் இரண்டாம் போக சாகுபடிக்கு 30 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் தொடங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பொதுப்பணித்துறை, மின்சார வாரியம் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொள்ள வேண்டும்.

கலந்து கொள்ளாத அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சிறு தானியத்தில் பிஸ்கட் தயார் செய்யும் இளம் ஆங்கில முதுநிலைப்பட்டதாரி தனசேகரனுக்கு சால்வை அணிவித்து கலெக்டர் பாராட்டினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி மங்கள ராமசுப்பிரமணியன், வேளாண்மை இணை இயக்குனர் உத்தண்ட ராமன், மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் ராஜலட்சுமி, கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் டாக்டர் ரவிச்சந்திரன், அரசுத்துறை அதிகாரிகள் மற்றும ்விவசாயிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்