< Back
மாநில செய்திகள்
ஓடைகளில் இருந்து வெளியேறும் மழைநீர் வீடுகளில் புகாமல் இருக்க நடவடிக்கை
சேலம்
மாநில செய்திகள்

ஓடைகளில் இருந்து வெளியேறும் மழைநீர் வீடுகளில் புகாமல் இருக்க நடவடிக்கை

தினத்தந்தி
|
9 Sept 2022 2:05 AM IST

சேலம் மாநகர பகுதியில் ஓடைகளில் இருந்து வெளியேறும் மழைநீர் வீடுகளில் புகாமல் இருக்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.

சேலம் மாநகர பகுதியில் ஓடைகளில் இருந்து வெளியேறும் மழைநீர் வீடுகளில் புகாமல் இருக்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.

ஆய்வு

சேலம் மாநகரில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் ஓடைகளில் இருந்து வெளியேறும் தண்ணீர் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் தெருக்களில் புகுந்தது. இந்த நிலையில் சேலம் அஸ்தம்பட்டி மண்டலம் டி.வி.எஸ். பஸ் நிறுத்தம் அருகே உள்ள வரட்டாறு ஓடையை தூர்வாரி அகலப்படுத்துவது குறித்து மேயர் ராமச்சந்திரன், ஆணையாளர் கிறிஸ்துராஜ், வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

மேலும் அவர்கள் சாமிநாதபுரம் பகுதியில் உள்ள ஓடையை தூர்வாரும் பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது மேயர் ராமச்சந்திரன் கூறியதாவது:-

சேலம் மாநகராட்சி பகுதிகளில் பெய்த தொடர்மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் ஓடைகளில் இருந்து வெளிவரும் மழைநீர் சாலைகளிலும், தாழ்வான பகுதிகளிலும் செல்வதால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது.

தகுந்த நடவடிக்கை

சாலைகளில் தேங்கியிருக்கும் மழைநீரை மின்மோட்டர் மூலம் அப்புறப்படுத்தவும், எந்திரங்கள் மூலம் மணல், சகதிகளை அப்புறப்படுத்தவும், மழைநீரால் பொதுமக்களுக்கு சுகாதாரகேடு ஏற்படாத வகையில் தூய்மை பணியாளர்களை கொண்டு குப்பைகளை உடனடியாக அப்புறப்படுத்தவும், மழையால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்குவதற்கு இடவசதிகளும், நிவாரணமும் வழங்கிட ஏற்பாடு செய்யப்படும்.

இனிவரும் காலங்களில் ஓடைகளில் இருந்து வெளிவரும் மழைநீர் தெருக்கள், வீடுகளில் புகாமல் இருப்பதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின் போது மாநகர் நல அலுவலர் யோகானந்த், மண்டலக்குழு தலைவர் உமாராணி, மாநகராட்சி கவுன்சிலர் வசந்தா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

முன்னதாக மாநகராட்சி மைய அலுவலக கூட்டரங்கில் மேயர் ராமச்சந்திரன் தலைமையில் தொடர் மழை காரணமாக மேற்கொள்ள வேண்டிய முன்எச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

மேலும் செய்திகள்