மயிலாடுதுறை
தென்னை மரங்களில் வெள்ளை ஈக்கள் தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்
|தென்னை மரங்களில் வெள்ளை ஈக்கள் தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி? என்று விவசாயிகளுக்கு வேளாண் அதிகாரி யோசனை கூறியுள்ளார்.
பொறையாறு:
தென்னை மரங்களில் வெள்ளை ஈக்கள் தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி? என்று விவசாயிகளுக்கு வேளாண் அதிகாரி யோசனை கூறியுள்ளார்.இதுகுறித்து செம்பனார்கோவில் (கூடுதல் பொறுப்பு) வேளாண்மை உதவி இயக்குனர் எஸ்.சுப்பையன் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
கரும் பூசணம்
தென்னை மரங்களில் உள்ள கரும் பூசணத்தை நிவர்த்தி செய்ய 25 கிராம் மைதா மாவை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து ஓலைகளின் மேல் நன்கு படுமாறு தெளிக்க வேண்டும். இதன்மூலம், மகசூல் இழப்பை தவிர்க்கலாம். மேலும், தென்னையில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்கள் தாக்கத்தால் மகசூல் பாதிக்கப்பட்டு விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்து வருகிறார்கள்.சுருள் வெள்ளை ஈக்கள் தென்னையை தாக்கி அதிக சேதத்தை உண்டாக்கும் ஒரு சாறு உறிஞ்சும் பூச்சியாகும். மெழுகு போன்ற வெள்ளை நிறப்பொருள் முதிர்ச்சியடைந்த ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்களால் சுரக்கப்படுகிறது.
கட்டுப்படுத்தும் வழிமுறைகள்
பூச்சி தாக்குதலின் ஆரம்ப நிலையிலேயே மஞ்சள் ஒட்டுபொறிகளை ஏக்கருக்கு 7-10 என்ற எண்ணிக்கையில் பயன்படுத்தி பூச்சிகளின் நடமாட்டத்தை கண்காணித்து வெகுவாக குறைக்கலாம். இந்த பூச்சிகளின் நடமாட்டம் மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை அதிகமாக இருப்பதால் விளக்குப்பொறிகளை இரண்டு என்ற அளவில் அமைத்து பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம்.
இலைகளின் கீழ்பகுதியில் காணப்படும் முட்டைகள் இளம் பருவம் மற்றும் முதிர்ந்த பூச்சிகளை விசைத்தெளிப்பான் கொண்டு தண்ணீரை மிகுந்த அழுத்தத்துடன் பீய்ச்சி அடிப்பதன் மூலம் பூச்சிகளின் பெருக்கத்தை கட்டுப்படுத்தலாம்.
இப்பூச்சி தாக்குதலால் ஏற்படும் கரும்பூஞ்சாண வளர்ச்சியை அகற்ற லிட்டருக்கு 10 கிராம் என்றளவில் மைதா மாவு பசையை தண்ணீரில் கரைத்து தென்னை இலைகளின் மேற்பகுதி நன்கு நனையும்படி தெளிக்க வேண்டும் மேலும், 5 சதவீத வேப்பங்கொட்டை கரைசல் 10 சதவீத வேப்ப இலைக்கரைசல் 0.5 சதவீத வேப்பஎண்ணெய் கரைசல் 0.3 சதவீத மீன் எண்ணெய், ரெசின் சோப்புக்கரைசல் அல்லது ஒரு லிட்டர் தண்ணீரில் 3-5 கிராம் மில்லி அளவில் ஜசேரியா பியூமோசோரோசே என்ற பூஞ்சாணத்தை ஒட்டும் திரவத்துடன் 5 கிராம் லிட்டர் நிர்மா பவுடர் அல்லது காதி சோப் கலந்து தெளிக்க வேண்டும்.
நன்மை செய்யும் பூச்சிகள்
ரூகோஸ் வெள்ளை ஈக்களை தாக்கும் என்கார்சியா ஒட்டுண்ணி குளவிகளின் கூட்டுப்புழு பருவத்தை சேகரித்து புதிதாக சுருள் வெள்ளை ஈ தாக்கப்பட்ட தோப்புகளில் விடுவதன் மூலம் இப்பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தலாம். இப்பூச்சிகளுக்கு எதிராக இயற்கையிலேயே காணப்படும் நன்மை செய்யும் பூச்சிகளான பச்சை கண்ணாடி இறக்கை பூச்சிகள் பொறி வண்டுகள் மற்றும் என்கார்சியா குளவிகள் முதலியவற்றை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.