கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில் நடவடிக்கை - அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்
|கள்ளக்குறிச்சி பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.
சேலம்,
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்த வந்த மாணவி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்ததை தொடர்ந்து, அங்கு பல்வேறு போராட்டங்கள் நடந்து வந்தன. இந்த போராட்டம் வன்முறையாக மாறி, சம்பந்தப்பட்ட பள்ளி வளாகம் முழுவதும் கலவரக்காரர்களால் சூறையாடப்பட்டது. இதில் அந்த பள்ளியில் இருந்த சான்றிதழ்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் தீக்கிரையாகின.
இந்த நிலையில் கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவர்களின் கல்விக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாத வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், கள்ளக்குறிச்சி சம்பவத்தில் உடனடி நடவடிக்கையாக அந்த பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் விருப்பம் உள்ள மாணவர்களை வேறு பள்ளிகளில் படிக்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.Measures taken to ensure that the education of Kallakurichi private school students is not affected - Minister Anbil Mahesh informed