சிவகங்கை
டிரோன் மூலம் நகராட்சி பகுதிகளை அளவீடு செய்யும் பணி
|டிரோன் மூலம் நகராட்சி பகுதிகளை அளவீடு செய்யும் பணியை நகர்மன்ற தலைவர் தொடங்கி வைத்தார்.
காரைக்குடி
காரைக்குடி நகராட்சியில் தமிழ்நாடு ஆளில்லா விமான கார்ப்பரேஷன் மூலம் நகராட்சி பகுதிகள் முழுவதும் அளவீடு செய்யும் பணியை ஆணையாளர் லெட்சுமணன் முன்னிலையில் நகர் மன்ற தலைவர் முத்துத்துரை தொடங்கி வைத்தார். இது குறித்து தலைவர் முத்துத்துரை கூறுகையில், தமிழ்நாட்டிலுள்ள அனைத்து பகுதிகளிலும் ஒருங்கிணைந்த வளர்ச்சியை பெற வேண்டும் என்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளார். நகராட்சி பகுதிகளின் வளர்ச்சிக்காகவும் உள்கட்ட அமைப்பு வசதிகளை மேம்படுத்த்தவும் அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன்படி தமிழ்நாடு ஆளில்லா விமான கார்ப்பரேஷன் டிரோன் மூலம் நகராட்சி பகுதிகளை அளவீடு செய்யும் பணியில் காரைக்குடி நகராட்சியும் தேர்வு செய்யப்பட்டு நகராட்சி பகுதிகளை கேமரா மூலம் அளவீடு செய்து அதனை புகைப்படம் எடுத்து பின்னர் அதனை கொண்டு டிஜிட்டல் முறையில் மிகவும் துல்லியமாக வரைபடம் தயாரித்து வழங்கப்படும். இதன் மூலம் நகர் குறித்த முழுமையான தகவல்கள் பெறப்பட்டு நகருக்கு தேவையான வளர்ச்சி திட்ட பணிகளை நிறைவேற்றுவதற்கு ஏதுவாக அமையும் என்றார். அப்போது நகர அமைப்பு அலுவலர் மாலதி, நகர மன்ற உறுப்பினர்கள் மெய்யர், கண்ணன், கலா காசிநாதன், தெய்வானை, இளமாறன், காரைசுரேஷ் இருந்தனர்.