< Back
மாநில செய்திகள்
வருகிற 28-ந் தேதி முதல் தென்மாவட்டங்களில் தட்டம்மை தடுப்பூசி முகாம்
மாநில செய்திகள்

வருகிற 28-ந் தேதி முதல் தென்மாவட்டங்களில் தட்டம்மை தடுப்பூசி முகாம்

தினத்தந்தி
|
26 Dec 2023 8:03 AM IST

தென்மாவட்டங்களில் இயல்பு நிலை படிப்படியாக திரும்பி வருகிறது.

சென்னை,

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் கடந்த 17, 18-ந் தேதிகளில் பெய்த அதிகனமழை காரணமாக பெரும்பாலான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பல வீடுகளில் தண்ணீர் சூழ்ந்தது. இதனால் மக்கள் பாதிக்கப்பட்டனர். தொடர்ந்து அரசு மேற்கொண்ட மீட்பு மற்றும் நிவாரண பணிகள் காரணமாக இயல்பு நிலை படிப்படியாக திரும்பி வருகிறது.

இந்த நிலையில், வெள்ள பாதிப்புக்குள்ளான தென்மாவட்டங்களில் உள்ள 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் சிறார்களுக்கு வருகிற 28-ந் தேதி முதல் தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி செலுத்தப்படும் என்று பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், கனமழையால் பாதிக்கப்பட்ட தென்மாவட்டங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக 15 வயதுக்குட்பட்டோருக்கு தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி செலுத்தும் பணி வரும் 28-ம் தேதி (வியாழக்கிழமை) தொடங்குகிறது.

தென்மாவட்டங்களில் மொத்தம் 8 லட்சம் சிறார்களும், குழந்தைகளும் உள்ளனர். இதில் மழை பாதிப்புக்குள்ளான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு மட்டும் தடுப்பூசி வழங்கப்படும். மத்திய அரசு 10 லட்சம் தவணை தட்டம்மை தடுப்பூசிகளை வழங்கியுள்ளது. எனவே, போதிய எண்ணிக்கையில் அவை கையிருப்பில் உள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்