சென்னை
ரிப்பன் மாளிகையில் உள்ள பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு மையத்தில் மேயர் ஆய்வு
|சென்னை ரிப்பன் மாளிகையில் உள்ள பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு மையத்தில் மேயர் பிரியா நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகையில் உள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம், தமிழ்நாடு மின்சார வாரியம், காவல் துறை, தீயணைப்புத் துறை மற்றும் நீர்வளத்துறை ஆகிய துறைகளைச் சார்ந்த புகார்கள் குறித்து நடவடிக்கை மேற்கொள்ள தொடர்புடைய துறைகளின் அதிகாரிகளும் கட்டுப்பாட்டு அறையில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பருவமழைக் காலங்களில் பொதுமக்கள் புகார்களைத் தெரிவிக்க 10 இணைப்புகளுடன் கூடிய 1913 உதவி எண்ணும், 044-2561 9206, 25619207, 25619208 ஆகிய தொலைபேசி எண்களும், 9445477205 என்ற வாட்ஸ்-அப் செயலியும் இந்தக் கட்டுப்பாட்டு அறையில் செயல்பட்டு வருகிறது.
சென்னையில் உள்ள சுரங்கப்பாதைகள், நீர்வழிக் கால்வாய்கள், ஏரிகள் மற்றும் கடல் முகத்துவாரங்களில் பொருத்தப்பட்டுள்ள 68 கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை இந்தக் கட்டுப்பாட்டு அறையிலுள்ள திரையின் மூலம் கண்காணிக்கலாம். இந்த கட்டுப்பாட்டு அறையை மேயர் பிரியா நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். தற்போது 10 இணைப்புகளுடன் செயல்பட்டு வரும் 1913 என்ற உதவி எண்ணில், வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் கூடுதலாக 10 இணைப்புகளை ஏற்படுத்த மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்து, புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது, மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, துணை கமிஷனர்கள் எம்.எஸ்.பிரசாந்த், விஷூ மஹாஜன் உள்பட நிர்வாகிகள் உடனிருந்தனர்.