கள்ளக்குறிச்சி
நகரமன்ற தலைவர் கார் கண்ணாடி உடைப்பு
|கள்ளக்குறிச்சியில் நகரமன்ற தலைவர் கார் கண்ணாடியை உடைத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி நகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணியில் சுமார் 50 பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வந்தனர். இவர்களின் ஒப்பந்த பணி காலம் நேற்று முன்தினம் முடிவடைந்தது. இதையடுத்து அந்த பணியாளர்களிடம் நகராட்சி ஆணையர் குமரன் உங்களுடைய பணி காலம் முடிவடைந்து விட்டது. எனவே நீங்கள் பணிக்கு வர வேண்டாம். இந்த மாதத்தில் பணிக்கான நிதி வந்தவுடன் மீண்டும் உங்களை பணிக்கு சேர்த்து கொள்வதாக கூறியதாக தெரிகிறது.
இந்த நிலையில் டெங்கு கொசு ஒழிப்பு பணியில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வேலையிலிருந்து நிறுத்தப்பட்ட கள்ளக்குறிச்சி அருகே விளம்பாரை சேர்ந்த ராமசந்திரன் மகன் அமர்நாத் (வயது 22) என்பவர் நேற்று கள்ளக்குறிச்சி நகராட்சி அலுவலகத்தில் வந்தார். பின்னர் அவர் அலுவலக நூழைவுவாயில் முன்பு நின்றிருந்த நகர மன்ற தலைவர் சுப்பராயலு பயன்படுத்தும் அரசு கார் கண்ணாடியை உருட்டு கட்டையால் அடித்து நொறுக்கினார். இதை தடுத்த கார் டிரைவரான கள்ளக்குறிச்சியை சேர்ந்த ராம்கி என்பவரை அவர் தாக்கினார். அப்போது அங்கு வந்த நகராட்சி பணியாளர்கள் ஒன்று சேர்ந்து அமர்நாத்தை பிடித்து கள்ளக்குறிச்சி போலீசில் ஒப்படைத்தனர். பின்னர் இது குறித்து ராம்கி அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அமர்நாத்தை கைது செய்து .வேலையிலிருந்து நிறுத்தப்பட்டதால் கார் கண்ணாடியை அடித்து உடைத்தாரா ? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் காரை உடைக்க தூண்டியதாக கூறி ஹாருன் என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.