< Back
மாநில செய்திகள்
தண்டையார்பேட்டையில் 22-ந்தேதி பொதுமக்களிடம் மேயர் மனுக்களை பெறுகிறார்
சென்னை
மாநில செய்திகள்

தண்டையார்பேட்டையில் 22-ந்தேதி பொதுமக்களிடம் மேயர் மனுக்களை பெறுகிறார்

தினத்தந்தி
|
18 July 2023 12:53 PM IST

‘மக்களைத் தேடி மேயர்' திட்டத்தின் கீழ் தண்டையார்பேட்டையில் வருகிற 22-ந்தேதி பொதுமக்களிடம் இருந்து சென்னை மாநகராட்சி மேயர் பிரியா நேரடியாக கோரிக்கை மனுக்களை பெற்று நடவடிக்கை மேற்கொள்கிறார்.

சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, 'மக்களைத் தேடி மேயர்' என்ற திட்டத்தின் மூலம் பொதுமக்களிடம் நேரடியாக மனுக்களை பெற்று, அவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுத்து வருகிறார். அதன்படி ஏற்கனவே மாநகராட்சிக்கு உட்பட்ட மண்டலங்களின் சில பகுதிகளில் 'மக்களைத் தேடி மேயர்' திட்டத்தின் மூலம் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்தநிலையில் தண்டையார்பேட்டை மண்டல அலுவலகத்தில் வருகிற 22-ந்தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை 'மக்களைத் தேடி மேயர்' திட்டத்தின் கீழ் பொதுமக்களிடம் இருந்து சென்னை மாநகராட்சி மேயர் பிரியா நேரடியாக கோரிக்கை மனுக்களை பெற்று நடவடிக்கை மேற்கொள்கிறார்.

இதில் சாலை வசதி, மழைநீர் வடிகால் வசதி, மின் விளக்கு, கழிப்பிடம், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ், சொத்துவரி மற்றும் தொழில்வரி, குப்பை அகற்றுதல், ஆக்கிரமிப்பு அகற்றுதல், பூங்கா மற்றும் விளையாட்டு திடல் அமைத்தல் போன்ற மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்த கோரிக்கை மனுக்களை பெற்று உரிய நடவடிக்கை எடுக்க உள்ளார். எனவே பொதுமக்கள் இதனை பயன்படுத்தி தங்கள் கோரிக்கை மனுக்களை வழங்கி பயன் அடையுமாறு சென்னை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்