சென்னை
அடையாறில் மக்களை தேடி மேயர் திட்ட முகாம்: 14 பேரின் மனுக்கள் மீது மேயர் பிரியா உடனடி நடவடிக்கை
|அடையாறில் நடைபெற்ற மக்களை தேடி மேயர் திட்ட முகாமில், 14 பேரின் மனுக்கள் மீது மேயர் பிரியா உடனடி நடவடிக்கை எடுத்தார்.
மக்களை தேடி மேயர் திட்டத்தின் கீழ், அடையாறு தெற்கு வட்டார துணை கமிஷனர் அலுவலகத்தில் நேற்று சென்னை மாநகராட்சி மேயர் பிரியா பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். இந்த முகாமில் மொத்தம் 303 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. இதில், 14 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதையடுத்து முதல்-அமைச்சர் சாலை விபத்து நிவாரண நிதியின் கீழ் 10 பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் காசோலைகளும், 20 கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து உணவு பொட்டலங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது.
இதேபோல, சென்னை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தின் சார்பில் 5 மகளிருக்கு தலா ரூ.5 ஆயிரத்து 479 மதிப்பிலான தையல் எந்திரங்களும், அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற 21 மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் பரிசுத்தொகையும் வழங்கினார். மேலும், 8 பேருக்கு முதியோர் மற்றும் விதவை உதவித்தொகையும், 2 மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகைக்கான ஆணைகளையும் வழங்கினார்.
பின்னர் மேயர் பிரியா நிருபர்களிடம் கூறியதாவது:-
பிற துறைகள் சார்ந்த கோரிக்கைகள் மீது அந்த துறைகளுடன் இணைந்து தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மண்டலம் 5-ல் நடந்த முகாமில் 333 புகார்கள் பெறப்பட்டு 331 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மண்டலம் 6-ல் நடைபெற்ற முகாமில் 241 புகார்கள் பெறப்பட்டு, இதில் 160 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. மீதமுள்ள புகார்கள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த முகாமில் பெறப்பட்ட மனுக்களின் மீதும் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மக்களை தேடி மேயர் திட்டத்தில் மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் தொடர்பாகவும் பெரும்பாலான புகார்கள் பெறப்பட்டுள்ளது. மழைநீர் வடிகால் பணிகள் முடிவுற்ற இடங்களில் சாலைகளை சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மழைநீர் வடிகால் பணிகள் சில இடங்களில் முடிக்கப்பட்டுள்ளன. எந்தெந்த பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகள் முடிந்துள்ளதோ அந்த இடங்களில் உடனடியாக சாலை பணிகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில், தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி., த.வேலு எம்.எல்.ஏ., துணை மேயர் மகேஷ்குமார், சென்னை மாநகராட்சி கமிஷனர் ஜெ.ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.