பாலியல் அத்துமீறலுக்கு எதிராக மேயர் பிரியாவின் விழிப்புணர்வு பிரசாரம்
|பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்கும் வகையில் ஆண்டுதோறும் 2 வார கால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெறும்.
கடந்த மாதம் 25-ந்தேதி பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் ஒழிப்பு தினம் அனுசரிக்கப்பட்டது. விழிப்புணர்வு பிரசார திட்டத்தை பெருநகர சென்னை மாநகராட்சி முன்னெடுத்துள்ளது. இதன் ஒருகட்டமாக மாநகராட்சி கட்டிடமான ரிப்பன் மாளிகை ஆரஞ்சு நிறத்தில் ஒளிரூட்டப்பட்டு இருக்கிறது. இதேபோல நேப்பியர் பாலம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் ஆரஞ்சு நிறத்தில் ஜொலித்து வருகின்றன.
இதுதவிர மாநகராட்சி சார்பில் பெண்கள் அதிகம் பணிபுரியும் இடங்கள் மற்றும் பொதுவான பகுதிகளிலும் பாலியல் குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில் இந்த பிரசார திட்டத்தின் ஒரு பகுதியாக மாநகராட்சி மேயர் பிரியா சமூக வலைதளத்தில் தனது கருத்தை பதிவிட்டுள்ளார். பாலியல் ரீதியான அத்துமீறல்களை கண்டிக்கும் வகையில், 'போதும்... நிறுத்துங்கள்...' என்று குறிப்பிடுவது போல தனது கையை நீட்டி பிரியா இந்த விழிப்புணர்வில் ஈடுபட்டுள்ளார்.
அவரது இந்த நூதன விழிப்புணர்வு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.