தஞ்சாவூர்
மயிலாடுதுறை -நெல்லை ரெயிலை நிறுத்தி இயக்க வேண்டும்
|மயிலாடுதுறை -நெல்லை ரெயிலை நிறுத்தி இயக்க வேண்டும்
ஆலக்குடி, அய்யனாபுரம் ரெயில் நிலையங்களில் மயிலாடுதுறை -நெல்லை ரெயிலை நிறுத்தி இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ரெயில்கள் இயக்கம்
தமிழ்நாட்டில் கடந்த 2 ஆண்டு காலமாக கொரோனா நோய் தொற்று காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ெரயில்கள் ஓட தொடங்கி உள்ளன. தஞ்சை -திருச்சி வழித்தடத்தில் அனைத்து ரெயில்களும் வழக்கம் போலஇயங்கி வருகின்றன. பாசஞ்சர் ரெயில்களிலும் எக்ஸ்பிரஸ் ெரயில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதுமட்டும் பயணிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. நீண்ட தூர பயணம் செய்ய ரெயில் பயணம் வசதி யாக இருப்பதால் கட்டண உயர்வை பயணிகள் பொருட்படுத்தவில்லை. அதே நேரத்தில் குறைந்த தூரம் பயணம் செய்யும் பயணிகள் அதிக கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆலக்குடி, அய்யனாபுரம்
கொரோனாநோய் தொற்று காரணமாக ரெயில்கள் நிறுத்தப்படுவதற்கு முன்பு மயிலாடுதுறை -நெல்லை பாசஞ்சர் ரெயில் ஆலக்குடி, அய்யனாபுரம் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று சென்றது. தற்போது இந்த 2 ரெயில் நிலையத்திலும் மயிலாடுதுறை -நெல்லை பாசஞ்சர் ரெயில் நிற்பதில்லை. மதிய நேரத்தில் திருச்சி செல்ல ரெயில் இல்லாததால் இந்த பகுதி மக்கள் சிரமப்படுகின்றனர். எனவே மயிலாடுதுறை- நெல்லை பாசஞ்சர் ரெயில் ஆலக்குடி, அய்யனாபுரம் ரெயில் நிலையத்தில் நின்று செல்ல ஆவன செய்ய வேண்டும் என்று ரெயில் பயணிகள் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பூதலூர் ரெயில் நிலையம்
இதைப்போல திருச்செந்தூர் -சென்னை விரைவு ரெயிலை பூதலூர் ரெயில் நிலையத்தில் திருச்செந்தூர் செல்லும் போது நின்று செல்கிறது. மறு மார்க்கத்தில் சென்னை செல்லும் போது பூதலூர் ரெயில் நிலையத்தில் நின்று செல்வதில்லை. எனவே திருச்செந்தூர் விரைவு ரெயில் சென்னை செல்லும் போது பூதலூர் ரெயில் நிலையத்தில் நின்று செல்ல ஆவண செய்ய வேண்டும் என்று ரெயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.