ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்த மாயாவதி சென்னை வருகை: பாதுகாப்பு பணிகள் தீவிரம்
|மாயாவதியின் வருகையையொட்டி பாதுகாப்பு பணிகளில் ஆயிரக்கணக்கான போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
சென்னை,
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று முன்தினம் சென்னையில் அவரது வீட்டின் அருகே வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த படுகொலை சம்பவம் தொடர்பாக இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் உடல் இன்று அடக்கம் செய்யப்பட உள்ளது. இந்த சூழலில் கொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு இன்று பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி நேரில் அஞ்சலி செலுத்த உள்ளார். இதற்காக உத்தர பிரதேசத்தில் இருந்து அவர் இன்று சென்னை வருகிறார். அதன்பிறகு ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்துக்கு ஆறுதல் கூற உள்ளார்.
மாயாவதியின் வருகையையொட்டி பாதுகாப்பு பணிகளில் ஆயிரக்கணக்கான போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தற்போது பெரம்பூரில் உள்ள சென்னை மாநகராட்சி பந்தர் கார்டன் பள்ளியில் ஆம்ஸ்ட்ராங் உடல் வைக்கப்பட்டுள்ளது. முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக தலைவர்கள், பகுஜன் சமாஜ் கட்சி தொண்டர்கள், திரையுலகினர், பொதுமக்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இதனிடையே பெரம்பூரில் உள்ள பகுஜன் சமாஜ் கட்சியின் அலுவலகத்தில் அவரது உடலை புதைக்க அனுமதி கோரிய வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இன்று காலை 9 மணிக்கு விசாரணைக்கு வர உள்ளது.