கரூர்
மாயனூர் ரெயில்வே கேட்டால் போக்குவரத்து நெரிசல்
|மாயனூர் ரெயில்வே கேட்டால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே இப்பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முக்கியமான சுற்றுலா தலம்
கரூர் மாவட்டத்தில் மாயனூர் முக்கியமான சுற்றுலா தலமாக விளங்குகிறது. மாயனூர் காவிரி ஆற்றில் கதவணை கட்டப்பட்டுள்ளது. இந்த கதவணையில் இருவழிச்சாலை வசதியுடன் கட்டப்பட்டுள்ளதால், கரூரில் இருந்து கோவை, நாமக்கல் மாவட்டங்களை இணைக்கும் வகையில் இச்சாலை உள்ளது. மேலும் மாயனூரில் பிரசித்தி பெற்ற செல்லாண்டி அம்மன் கோவில், அம்மா பூங்கா ஆகியவை அமைந்துள்ளன.
வளர்ந்து வரும் சுற்றுலா தலமாக விளங்குகிறது. இங்கு நாள்தோறும் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். மேலும் நாமக்கல், சேலம் செல்பவர்கள் மாயனூர் கதவணை வழியாக செல்வதால் காலமும், தொலைதூரமும் குறைவால் ஏராளமானோர் இந்த வழியாக சென்று வருகின்றனர்.
ரெயில்வே கேட்
மாயனூர் கதவணை செல்வதற்கு மாயனூரில் உள்ள ரெயில்வே கேட்டை கடந்து தான் செல்ல வேண்டும். ரெயில்வே கேட்டில் காலை முதல் இரவு வரை ஏராளமான பயணிகள் பயணிக்கும் நிலை உள்ளது. அதேவேளையில் கரூர், திருச்சி ரெயில்வே பாதை வழித்தடத்தில் பயணிகள் ரெயில்கள் மற்றும் சரக்கு ரெயில்கள் அதிகமாக சென்று வருகின்றன. இதனால் மாயனூர் ரெயில்வே கேட் அடிக்கடி மூடப்படும் சூழல் உள்ளது.
இதனால் வெளியூரில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் ரெயில்வே கேட்டில் சிக்கி பலமணி நேரம் காத்திருக்க வேண்டிய அவலநிலை உள்ளது. இப்படி ஒவ்வொரு முறையும் ரெயில்வே கேட் மூடப்படும் போது இரண்டு பக்கமும் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்று போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்துகிறது.
மேம்பாலம் கட்ட கோரிக்கை
காலை நேரங்களில் பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் இந்த ரெயில்வே கேட்டில் காத்திருந்து செல்ல வேண்டி உள்ளது. மற்றொருபுறம் ரெயில்வே கேட்டால் கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையிலும் போக்குவரத்து ஏற்படுகிறது. வளர்ந்து வரும் சுற்றுலா தலமான மாயனூரில் பொதுமக்கள், வெளியூர் பயணிகள் சென்று வர ஏதுவாக அப்பகுதியில் மேம்பாலம் கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.