புத்தாண்டு அனைவருக்கும் நல்ல ஆரோக்கியம், வெற்றியைக் கொடுக்கட்டும் - கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து..!
|வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்குவதில் இணைந்து செயல்படுவதற்கான நமது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துவோம் என்று கவர்னர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.
சென்னை,
தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள ஆங்கில புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்து இருப்பதாவது:-
2024 புத்தாண்டை முன்னிட்டு, அனைவருக்கும் எனது அன்பான நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
2023ஆம் ஆண்டு, விண்வெளி ஆராய்ச்சியில் சாதனைகளை நிகழ்த்தியது, ஜி20 தலைமையில் நீங்காத தாக்கத்தை ஏற்படுத்தியது, விளையாட்டுத் துறையில் நமது வீரர், வீராங்கனைகள் சிறப்பாக பரிணமித்தது என சுயசார்பு பாரதத்தின் வலுவான அடித்தளத்தை அமைப்பதற்கான நமது தேசிய உறுதிப்பாட்டின் சான்றாக விளங்கியது.
சட்டசீர்திருத்தங்கள் காலனித்துவ பாரம்பரியத்தை நிராகரித்ததுடன், நமது தேசத்தின் ஜனநாயக நெறிமுறைகளை மேலும் ஆழப்படுத்தியுள்ளன. சுப்ரீம் கோர்ட்டு, ஜம்மு & காஷ்மீரின் முழுமையான ஒருங்கிணைப்பு தொடர்பாக வழங்கிய தனது வரலாற்றுபூர்வ தீர்ப்பின் மூலம் ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற உணர்வை மேலும் வலுப்படுத்தியது. நமது இளையசக்தி அனைத்து துறைகளிலும் தங்கள் திறமை மற்றும் தொழில்முனைவு மேதைத்துவத்தை நிரூபித்து வருகிறது. நமது புராதன சனாதன தரிசனத்தில் ஆழமாக வேரூன்றிய நமது தெளிவான கலாசார ஆன்மிகம், உலகை ஒரே குடும்பம் ஆக ஒருங்கிணைத்துள்ளது. நாம் நமது சமூக ஒற்றுமையை வலுப்படுத்தி, 'ஒரேதேசம்' ஆக கடுமையான சவால்களை முறியடித்து முன்னேறினோம்.
அதே நம்பிக்கை, அர்ப்பணிப்பு, கூட்டுறுதி மற்றும் ஆற்றலுடனும் நாம் 2024-இல் நுழைகிறோம். நமது முயற்சிகளில் சிறந்து விளங்கவும், நமது தேசத்தின் வளர்ச்சிப் பயணத்திற்கு வேகம் சேர்ப்பதற்காகவும், 2047-க்குள் வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்குவதில் இணைந்து செயல்படுவதற்கான நமது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துவோம்.
'புத்தாண்டு 2024' நம் அனைவருக்கும் மேலும் மகிழ்ச்சி, நல்லிணக்கம், நல்ல ஆரோக்கியம் மற்றும் வெற்றியைக் கொடுக்கட்டும்.
இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.