தஞ்சாவூர்
தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு குறித்து பேசலாமா?
|தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு குறித்து பேசலாமா?
மணிப்பூரில் கலவரத்தை கட்டுப்படுத்த முடியாதவர்கள், தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு குறித்து பேசலாமா? என்று ஆ.ராசா எம்.பி. கேள்வி எழுப்பினார்.
பொதுக்கூட்டம்
கும்பகோணத்தில் உள்ள ஒரு திருமண மகாலில், முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு முன்னாள் மாவட்ட பிரதிநிதி ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாநகர செயலாளர் தமிழழகன் வரவேற்றார்.
அவைத்தலைவர் வாசுதேவன், துணை செயலாளர்கள் சசிதரன், சிவானந்தம், செந்தாமரை, பொருளாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எம்.பி.க்கள் ராமலிங்கம், சண்முகம், கல்யாணசுந்தரம், அன்பழகன் எம்.எல்.ஏ. ஆகியோர் பேசினர்.
கூட்டத்தில் தி.மு.க. துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-
எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்
உலகம் முழுவதும் சமூக நீதி உள்ள அனைத்து இடங்களிலும் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாள் கொண்டாடப்படுவது எங்களுக்கு மகிழ்ச்சியை தருகிறது. அப்படிப்பட்ட உயர்ந்த தலைவனுக்கு தமிழ்நாட்டில் பேனா நினைவு சின்னம் வைக்க தகுதி இல்லாதவர்கள் எல்லாம் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
ஆனால் சுப்ரீம் கோர்ட்டே கருணாநிதிக்கு பேனா நினைவு சின்னம் வைக்கலாம் என உத்தரவு வழங்கியுள்ளது. ஆனால் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எதிர்க்கிறார்.
பிரதமர் பதில் சொல்லவில்லை
அதானி மீதான ஊழல் குற்றச்சட்டுக்கு பதிலளிக்கக்கோரி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் கோரிக்கைக்கு இன்னும் பிரதமர் மோடி பதில் சொல்லவில்லை. அதானி பற்றிய குற்றச்சாட்டிற்கு பிரதமர் மோடி மவுனம் சாதித்தார். மவுனமாக இருந்தாலே குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டதாக இருக்கும் என நாடாளுமன்றத்தில் கூச்சல் கிளம்பியதால் நாடாளுமன்றம் முடங்கியது.
என்மீது குற்றம் சாட்டியபோது நானே கோர்ட்டில் வாதாடி நானே குற்றவாளி இல்லை என்று கோர்ட்டால் விடுவிக்கப்பட்டேன். அதுபோன்று மோடியும் தன்னை குற்றமற்றவர் என்று நிரூபிக்க வேண்டும்.
தமிழக சட்டம்-ஒழுங்கு குறித்து பேசலாமா?
மதத்தின் பெயரால் மக்களை பிரித்து ஆட்சி செய்பவர்களுக்கு தமிழகத்தின் கலாசாரம் எப்படி தெரியும். அங்கு பா.ஜ.க. ஆட்சி தானே நடக்கிறது. அந்த கலவரத்தை தடுக்க முடியாதவர்கள் தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கை பற்றி பேசுவது ஏன்?.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர் தட்சிணாமூர்த்தி, ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் கணேசன், மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் முத்துசெல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நடேசன் நன்றி கூறினார்.