மே 8-ந் தேதி பிளஸ்-2 தேர்வு முடிவு அரசு தேர்வுத்துறை தகவல்
|பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு மே 8-ந் தேதி வெளியிடப்படும் என்று அரசு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு கடந்த மாதம் (மார்ச்) 13-ந் தேதி தொடங்கி, கடந்த 3-ந் தேதியுடன் நிறைவு பெற்றது. இந்த பொதுத்தேர்வை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து சுமார் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் எழுதினார்கள். இவர்களுக்கான தேர்வு முடிவு ஏற்கனவே திட்டமிட்டபடி அடுத்த மாதம் (மே) 5-ந் தேதி வெளியாகும் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்து இருந்தது.
இந்த நிலையில் அடுத்த மாதம் 7-ந் தேதி மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு நடக்க இருப்பதால், பிளஸ்-2 தேர்வு முடிவு தள்ளிப்போக வாய்ப்பு இருப்பதாக பரபரப்பாக பேசப்பட்டது. அதற்கேற்றாற்போல், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் பிளஸ்-2 மாணவர்களுக்கான தேர்வு முடிவு தள்ளிப்போகிறது என்று நேற்று முன்தினம் தெரிவித்தார். ஆனால் எந்த தேதியில் தேர்வு முடிவு வெளியாகும் என்ற கேள்வி மட்டும் இருந்து வந்தது.
அப்படிப்பட்ட சூழ்நிலையில், அரசு தேர்வுத்துறை அந்த கேள்விக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பை நேற்று வெளியிட்டு இருக்கிறது. இதுதொடர்பாக அரசு தேர்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு அடுத்த மாதம் (மே) 8-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 9.30 மணிக்கு அண்ணா நூற்றாண்டு நூலக கூட்டரங்கில் வெளியிடப்பட உள்ளது. தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிடுகிறார்.
அதனைத் தொடர்ந்து தேர்வர்கள் www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge.tn.gov.in என்ற இணையதளங்களுக்கு சென்று தங்களுடைய பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து, மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
இதுதவிர ஒவ்வொரு மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும், மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலும் கட்டணமின்றி மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள முடியும்.
பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் படித்த பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழி படிவத்தில் குறிப்பிட்டுள்ள செல்போன் எண்ணுக்கும், தனித்தேர்வர்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது வழங்கிய செல்போன் எண்ணுக்கும் குறுஞ்செய்தி வாயிலாக மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.