செங்கல்பட்டு
மொரீஷியஸ் ஜனாதிபதி மாமல்லபுரம் வருகை
|மாமல்லபுரம் வருகை தந்த மொரீஷியஸ் ஜனாதிபதி பிரித்விராஜ்சிங் ரூபன் அங்குள்ள கடற்கரை கோவில், ஐந்துரதம் உள்ளிட்ட பல்லவர் கால புராதன சின்னங்களை ரசித்து பார்த்தார்.
மொரீஷியஸ் ஜனாதிபதி
மொரீஷியஸ் ஜனாதிபதி பிரித்விராஜ்சிங் ரூபன் நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் குண்டு துளைக்காத காரில் மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வந்தார். முன்னதாக கடற்கரை கோவில் பகுதிக்கு வந்த அவரை தமிழக அரசு சார்பில் மாமல்லபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெகதீஸ்வரன், திருக்கழுக்குன்றம் தாசில்தார் பிரபாகரன், மாமல்லபுரம் சுற்றுலா அலுவலர் சக்திவேல், மாமல்லபுரம் வருவாய் அலுவலர் ரகு, கிராம நிர்வாக அலுவலர் முனுசாமி ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
பிறகு மாமல்லபுரம் கடற்கரை கோவில் வளாகத்திற்குள் நடந்து சென்று பல்லவ மன்னர்களால் வடிக்கப்பட்ட கடற்கரை கோவிலின் எழில்மிகு தோற்றத்தை கலை நயத்துடன் கண்டு ரசித்தார். கடற்கரை கோவிலின் இரு கருவறைகளில் வீற்றிருக்கும் சிவன், விஷ்ணு சன்னதிகளை பார்வையிட்டார்.
போலீஸ் பாதுகாப்பு
படகு துறை, அகழி பகுதிகளையும் அவர் பார்வையிட்டார். கடற்கரை கோவில் சிற்பங்களை ரசித்து பார்த்த அவர் அங்கு தன் குடும்பத்தினருடன் நின்று புகைப்படம் எடுத்து கொண்டார். மொரீஷியஸ் நாட்டு ஜனாதிபதி வருகையையொட்டி மாமல்லபுரம் கடற்கரை கோவில், ஐந்துரதம் உள்ளிட்ட முக்கிய புராதன சின்னங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
மொரீஷியஸ் ஜனாதிபதி வருகையையொட்டி சுற்றுலா பயணிகளுக்கு எந்தவித இடையூறும் ஏற்படவில்லை. அவர்கள் போலீசாரின் பாதுகாப்பு சோதனைகளுக்கு உட்படுத்தப்படாமல் வழக்கம் போல் சுதந்திரமாக புராதன சின்னங்களை கண்டுகளிக்க அனுமதிக்கப்பட்டனர்.