< Back
மாநில செய்திகள்
4,200 ஆண்டு கால தமிழர் வரலாற்றை விளக்கும் பொருநை கண்காட்சி
கோயம்புத்தூர்
மாநில செய்திகள்

4,200 ஆண்டு கால தமிழர் வரலாற்றை விளக்கும் பொருநை கண்காட்சி

தினத்தந்தி
|
19 May 2022 11:38 PM IST

கோவை வ.உ.சி. மைதானத்தில் 4,200 ஆண்டு கால தமிழர் வரலாற்றை விளக்கும் பொருநை அகழ்வாராய்ச்சி மற்றும் அரசின் சாதனை விளக்க கண்காட்சியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

கோவை, மே.20-

கோவை வ.உ.சி. மைதானத்தில் 4,200 ஆண்டு கால தமிழர் வரலாற்றை விளக்கும் பொருநை அகழ்வாராய்ச்சி மற்றும் அரசின் சாதனை விளக்க கண்காட்சியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

கண்காட்சி

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வுகளில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்கள் மற்றும் அவற்றின் மாதிரிகளின் தொகுப்பு அடங்கிய பொருநை கண்காட்சி மற்றும் தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க ஓவிய கண்காட்சி தொடக்க விழா நேற்று கோவை வ.உ.சி. மைதானத்தில் நடைபெற்றது. இந்த கண்காட்சியை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.

இந்த கண்காட்சி அரங்கானது 10 ஆயிரம் சதுரஅடியில் அமைக்கப்பட்டு உள்ளது. முதல் பாதியில் தமிழக அரசின் சாதனைகளை விளக்கி கூறும் வகையில் 190 ஓவியங்கள் வரையப்பட்டு பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டு உள்ளன. இந்த ஓவியங்களை ஒவ்வொன்றாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். அவருக்கு அங்கிருந்த அதிகாரிகள் அந்த ஓவியங்கள் குறித்து எடுத்து கூறினர். இதில் முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றுக்கொண்டது, பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கியது, வளர்ச்சி பணிகளை பார்வையிட்டது, கிராம சபை கூட்டத்தில் பங்கேற்றது, பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தது உள்பட முதல்-அமைச்சரின் பல்வேறு நிகழ்ச்சிகள் தத்ரூபமாக ஓவியங்களாக வரையப்பட்டு காட்சி படுத்தப்பட்டு இருந்தன.

அமைச்சர்கள்

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, தங்கம் தென்னரசு, தா.மோ.அன்பரசன், மு.பெ. சாமிநாதன், கயல்விழி செல்வராஜ், முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி, கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார், கலெக்டர் சமீரன், ஆ.ராசா எம்.பி., செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குனர் ஜெயசீலன், முன்னாள் எம்.எல்.ஏ. நா.கார்த்திக், முன்னாள் எம்.பி.நாகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் இந்த கண்காட்சி அரங்கினை பார்வையிட்டார். அவருக்கு மாநகராட்சி துணை ஆணையாளர் ஷர்மிளா கண்காட்சியில் இடம்பெற்றிருந்தவை குறித்து எடுத்து கூறினார்.

முதுமக்கள் தாழி, உறைகிணறு

தமிழக தொல்லியல் துறை சிவகங்கை மாவட்டம்- கீழடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளான கொந்தகை, அகரம் மற்றும் மணலூர், தூத்துக்குடி மாவட்டம்- சிவகளை, அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம், கிருஷ்ணகிரி மாவட்டம் - மயிலாடும்பாறை, விருதுநகர் மாவட்டம்- வெம்பக்கோட்டை, நெல்லை மாவட்டம்- துளுக்கார்பட்டி, தர்மபுரி மாவட்டம்- பெரும்பாலை ஆகிய இடங்களில் அகழாய்வு மேற்கொண்டு வருகிறது.

இந்த அகழாய்வில் கிடைத்த அரிய பொருட்கள் மற்றும் அந்த பொருட்களின் மாதிரிகள் கீழடி, மயிலாடும்பாறை, சிவகளை, கொடுமணல், கொற்கை, ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட தலைப்புகளின் கீழ் கண்காட்சியில் வைக்கப்பட்டு இருந்தன. ஒவ்வொரு பொருட்கள் குறித்தும், சிறப்புகள் குறித்தும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தகவல் பலகைகள் வைக்கப்பட்டு இருந்தன. இதில் கீழடியில் கண்டறியப்பட்ட உறை கிணறு மாதிரி, மண் பானைகள் மற்றும் முதுமக்கள் தாழிகளின் மாதிரிகள் தத்ரூபமாக செய்யப்பட்டு காட்சி படுத்தப்பட்டு இருந்தன.

இதுதவிர கீழடியில் கண்டெடுக்கப்பட்ட சூது பவள மோதிரகல், சூது பவள மணிகள், தங்கத்தில் செய்யப்பட்ட பொத்தான், கம்மல், வளையம், ஊசி ஆகியவற்றின் புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன.

இரும்பு பொருட்கள்

கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறையில் கிடைத்த இரும்பு பொருட்களின் கரிம மாதிரியை ஏ.எம்.எஸ். முறையில் காலக்கணக்கீடு செய்யப்பட்டதில் சுமார் 4,200 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் இரும்பு பயன்பாடு நிலவியது என உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிய கற்காலம் முதல் வரலாற்று காலம் வரை தொடர்ந்து வாழ்விடமாக இருந்துள்ளதையும் அறியமுடிகிறது.

எனவே தமிழர்களின் 4,200 ஆண்டுகால வரலாற்றை விளக்கும் வகையில் அகழ்வாய்வில் கிடைத்த ஈட்டி முனைகள், அம்பு முனைகள், கத்திகள், கோடரி, ஈமச் சின்னங்களில் வைக்கப்படும் படையல் பொருட்கள், மூன்றுகால் குடுவை உள்ளிட்ட பானைகள், கிண்ணங்கள், சுடுமண்ணால் ஆன பொருட்களும் காட்சி படுத்தப்பட்டு உள்ளன.

இந்த கண்காட்சியானது 10 நாட்கள் நடக்கிறது. இதனை பொதுமக்கள் பார்வையிட்டு செல்லாம்.

மேலும் செய்திகள்