தூத்துக்குடி
தீக்குச்சி தொழிற்சாலை தீவிபத்தில் பலியான மூதாட்டி குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிவாரண உதவி:கனிமொழி எம்.பி. வழங்கினார்
|தீக்குச்சி தொழிற்சாலை தீவிபத்தில் பலியான மூதாட்டி குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிவாரண உதவியை கனிமொழி எம்.பி. வழங்கினார்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி அருகே உள்ள சித்திரம்பட்டி கிராமத்தில் இயங்கி வரும் தீக்குச்சி தொழிற்சாலையில் கடந்த 30-ந்தேதி ஏற்பட்ட தீ விபத்தில் கோவில்பட்டி செக்கடிதெருவை சேர்ந்த தங்கவேல் மனைவி மாரியம்மாள் (வயது 63) பலியானார். சித்திரம்பட்டியை சேர்ந்த காட்டுராஜா மனைவி கனக ராஜேஸ்வரி காயம் அடைந்தார். இந்த நிலையில் கனிமொழி எம்.பி. நேற்று மாரியம்மாள் வீட்டிற்கு சென்று, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். தொடர்ந்து அவரது குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.3 லட்சத்தை அவர் வழங்கி ஆறுதல் கூறினார். தொடர்ந்து விபத்தில் காயம் அடைந்து கோவில்பட்டி அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் பெண் தொழிலாளி கனகராஜேஸ் வரியை சந்தித்து ஆறுதல் கூறி, அவருக்கு முதல்-அமைச்சர் நிவாரண நிதியிலிருந்து ரூ.50 ஆயிரத்தை வழங்கினார்.
அவருடன் அமைச்சர் கீதா ஜீவன், கோவில்பட்டி உதவி கலெக்டர் ஜெயா, தாசில்தார் லெனின், வருவாய் ஆய்வாளர் ராஜசேகர், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவர் மகாலட்சுமி கே. சந்திரசேகர், ஒன்றிய செயலாளர் வீ.
முருகேசன், பொறியாளர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் ஆர்.ரமேஷ் மற்றும் நிர்வாகிகள் உடன் சென்றனர்.
முன்னதாக, கழுகுமலை தேர்வு நிலை பேரூராட்சி செந்தில் நகரில் ரூ.55 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பூங்காவை கனிமொழி எம்.பி. திறந்து வைத்தார். தொடர்ந்து கழுகுமலை- கோவில்பட்டி சாலையில் புதிய மேல்நிலை நீர் தேக்க தொட்டிக்கு அவர் அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து கழுகுமலை அருகே உள்ள தெற்கு கழுகுமலை, வெங்கடேஸ்வரபுரம், துரைச்சாமிபுரம் ஆகிய கிராமங்களில் நடைபெற்ற மக்கள் களம் நிகழ்ச்சியில் பங்கேற்று மக்களின் குறைகளை அவர் கேட்டறிந்தார். இதில் ஏராளமான பொதுமக்கள் அவரிடம் கோரிக்கை மனுக்களை கொடுத்தனர். இவ்விழாவில் அமைச்சர் கீதாஜீவன், தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி, கோவில்பட்டி உதவிகலெக்டர் ஜெயா, கோவில்பட்டி தாசில்தார் லெனின், கழுகுமலை பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன், கழுகுமலை பேரூராட்சி தலைவர் அருணா சுப்பிரமணியன், கயத்தாறு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாண்டியராஜன், ஐகோர்ட்ராஜா, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ராஜ்குமார், கயத்தாறு தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர், சுப்பிரமணியன், கோவில்பட்டி மத்திய ஒன்றிய செயலாளர் பீக்கிலிபட்டி முருகேசன், கழுகுமலை நகர செயலாளர் கிருஷ்ணகுமார், வானர முட்டி முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் மாரியப்பன் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.