நாமக்கல்
10-ம் வகுப்பு பொதுத்தேர்வில்92.98 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி
|நாமக்கல் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 92.98 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்று உள்ளனர். கடந்த ஆண்டைவிட தேர்ச்சி சதவீதம் அதிகரித்து உள்ளது.
92.98 சதவீத மாணவர்கள்
10-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. நாமக்கல் மாவட்டத்தில் இந்த ஆண்டு 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 300 பள்ளிகளை சேர்ந்த 10 ஆயிரத்து 121 மாணவர்களும், 9 ஆயிரத்து 392 மாணவிகளும் என மொத்தம் 19 ஆயிரத்து 513 பேர் தேர்வை எழுதி இருந்தனர். இவர்களின் 9 ஆயிரத்து 170 மாணவர்களும், 8 ஆயிரத்து 973 மாணவிகளும் என மொத்தம் 18 ஆயிரத்து 143 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர்.
அதன்படி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 90.60 சதவீதமாகும். மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 95.54 சதவீதமாகும். மாவட்டத்தில் மொத்தம் 92.98 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர்.
குறிப்பாக மாணவர்களைவிட மாணவிகள் 4.94 சதவீதம் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு மாநில அளவில் 27-வது இடத்தில் இருந்த நாமக்கல் மாவட்டம், தற்போது 15-வது இடத்தை பெற்றுள்ளது.
தேர்ச்சி விகிதம் அதிகரிப்பு
மேலும் கடந்த ஆண்டைவிட 4.1 சதவீதம் தேர்ச்சி விகிதமும் அதிகரித்து உள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதனிடையே நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 155 அரசு பள்ளிகளில் 5 ஆயிரத்து 718 மாணவர்களும், 5 ஆயிரத்து 493 மாணவிகளும் என மொத்தம் 11 ஆயிரத்து 211 பேர் தேர்வை எழுதினார்கள். அதில் 10 ஆயிரத்து 115 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதன் தேர்ச்சி சதவீதம் 90.22 ஆகும்.
இதேபோல் மாவட்டத்தில் உள்ள 2 அரசு ஆதிதிராவிட நலப் பள்ளிகளை சேர்ந்த 117 மாணவர்கள் தேர்வு எழுதினார்கள். அதில் 97 பேர் தேர்ச்சி பெற்றனர். அவற்றின் தேர்ச்சி சதவீதம் 82.91 ஆகும்.
92 பள்ளிகள்
மேலும் 4 பழங்குடியின பள்ளிகளை சேர்ந்த 94 மாணவர்கள் மற்றும் 144 மாணவிகள் என மொத்தம் 238 பேர் தேர்வை எழுதினார்கள். அதில் 209 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதன் தேர்ச்சி சதவீதம் 87.82 ஆகும்.
அதேபோல் சமூக நலப் பள்ளியில் தேர்வை எழுதிய 10 பேரில், 8 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதன் தேர்ச்சி சதவீதம் 80 ஆகும். இந்த ஆண்டு 92 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. அவற்றில் 29 பள்ளிகள் அரசு பள்ளிகள் என்பது குறிப்பிடத்தக்கது.