கரூர்
மாவட்டத்தில் மாபெரும் தடுப்பூசி முகாம்: 1,905 மையங்களில் நாளை நடக்கிறது
|கொரோனா பரவலை கட்டுப்படுத்த கரூர் மாவட்டத்தில் மாபெரும் தடுப்பூசி முகாம் 1,905 மையங்களில் நாளை நடக்கிறது.
அதிகரிக்கும் கொரோனா
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று முற்றிலும் குறைந்து இருந்த நிலையில் தற்போது தினமும் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதால், பொது சுகாதாரத்துறையின் மூலம் தடுப்பு நடவடிக்கைகளும், கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் மற்றும் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா தொற்று அதிகமாக பரவி வருவதால், தொற்றில் இருந்து பாதுகாக்கவும், மீண்டும் பரவி வரும் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்து கொள்ளவும், கொரோனா தடுப்பூசி மருந்தே, தொற்றிற்கு எதிரான முதன்மை கேடயம்.இதனை கருத்தில் கொண்டு தகுதி வாய்ந்த அனைத்து பொதுமக்களுக்கும் தடுப்பூசி அவரவர்தம் வசிக்கும் பகுதிகளிலேயே எளிதில் கிடைத்திடும் வகையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்த தமிழக அரசால் உத்தரவிடப்பட்டுள்ளது.
பூஸ்டர் தடுப்பூசி
மேலும், இதர நாட்களிலும் அரசு மருத்துவமனைகளிலும் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. மேலும், கரூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி 12 முதல் 14 வயதுடைய பள்ளி செல்லும் குழந்தைகள் மற்றும் 15 முதல் 18 வயதுடையவர்கள் போடப்பட்டவர்களின் சதவீதம் குறைவாக உள்ளதால் அவர்களுக்கு கொரோனா தொற்று அதிகம் பரவ வாய்ப்பு உள்ளதால் இவ்வயதுடையவர்கள் இந்த முகாமில் தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம். மேலும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி அரசு நிலையங்களிலேயே போட்டுக்கொள்ளலாம்.இவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி 2-ம் தவணை தடுப்பூசி போட்ட தேதியிலிருந்து, 9 மாத கால அவகாசத்திலிருந்து தற்போது 6 மாத கால அவகாசமாக குறைக்கப்பட்டுள்ளதால் இவர்களும் இத்தடுப்பூசி முகாமை பயன்படுத்தி பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம்.
தடுப்பூசி ஒன்றே ஒரே தீர்வு
இதேபோல் முதல் தவணை தடுப்பூசி போட்டு இன்னும் இரண்டாம் தவணை தடுப்பூசி போட வேண்டி நிலுவையில் உள்ளவர்கள் மொத்தம் 41 ஆயிரத்து 360 பேர் கரூர் மாவட்டத்தில் உள்ளனர். இவர்களும் இம்முகாமை பயன்படுத்தி கொள்ளலாம்.எனவே, இதுவரை முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள், இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டியவர்கள் மற்றும் மூன்றாம் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டிய 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் முன்களப்பணியாளர்கள் ஆகிய அனைவரும் தவறாமல் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெறும் 31-வது மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமில் கலந்து கொண்டு, கொரோனாவை வெல்வதற்கு தடுப்பூசி ஒன்றே ஒரே தீர்வு என்பதை உணர்ந்து தடுப்பூசி செலுத்தி, கொரோனா தொற்று பரவுவதை கட்டுப்படுத்துவதற்கு அனைவரும் மாவட்ட நிர்வாகத்திற்கும் போதிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.