``ஆணவக்கொலை வன்முறை அல்ல, அக்கறையா..'' - திருமாவளவன் ஆவேசம்
|ஆணவக் கொலையை குற்றமல்ல, அக்கறை என்று ரஞ்சித் பேசியது, சமூக நல்லிணக்கத்துக்கு எதிரானது என திருமாவளவன் கூறியுள்ளார்.
சென்னை,
ஆணவக்கொலை குறித்து நடிகரும் கவுண்டம்பாளையம் படத்தின் இயக்குனருமன ரஞ்சித் பேசியது தற்போது சமூக வலைதளங்களில் சூடான விவாதத்தை கிளப்பி இருக்கிறது. ஆணவக் கொலை தவறு இல்லை என்ற ரீதியில், "பெற்ற பிள்ளையே வாழ்க்கை என இருப்பவர்கள் பிள்ளைகளின் வாழ்க்கை பாதிக்கப்படுகிறது என்ற அக்கறையினால் வரும் கோவம் தான் அது, அது வன்முறை அல்ல" என நேற்று அவர் பேசி இருந்தார். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது..
இந்த நிலையில், ஆணவக் கொலையை குற்றமல்ல, அக்கறை என்று ரஞ்சித் பேசியது, சமூக நல்லிணக்கத்துக்கு எதிரானது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பதில் அளித்துள்ளார். இது குறித்து மேலும் அவர் பேசியதாவது;
"ஆணவக் கொலையை ஒரு குற்றமில்லை என்று சொல்வது ஒன்று அரசியல் அறியாமையாக இருக்க வேண்டும் அல்லது வணிக நோக்கமாக இருக்க வேண்டும் அதை வைத்து படம் எடுத்து சம்பாதித்து லாபமீட்ட வேண்டும் என்று கருதி சமூகத்திற்கு சமூக நல்லிணத்தை திட்டத்திற்கு எதிராக பேசி கருத்துக்களை பரப்புவது நாட்டுக்கு நல்லதல்ல அவர்கள் இதுபோன்ற கருத்துக்களை பரப்புவது கவலை அளிக்கிறது." என்றார்.