நாமக்கல்
செங்கல்லால் தாக்கி பெண் படுகொலை
|குமாரபாளையத்தில் செங்கல்லால் தாக்கி பெண் படுகொலை செய்யப்பட்டார். அவரை கொன்ற கணவர் போலீசில் சரண் அடைந்தார்.
குமாரபாளையம்
கருத்து வேறுபாடு
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் காவேரி நகர் பகுதியில் வசித்து வருபவர் நடராஜ் (வயது 36), கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி உமாராணி (29). இவர்களுக்கு முறையே 4 மற்றும் 2-ம் வகுப்பு படிக்கும் 2 மகன்கள் உள்ளனர்.
இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக நடராஜூம், அவருடைய மனைவியும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். மேலும் மூத்த மகன் தந்தையுடனும், இளைய மகன் தாயாருடனும் இருந்து வந்தனர்.
இந்த நிலையில் உமாராணிக்கு தகாத உறவு இருப்பதாக நடராஜ் சந்தேகம் அடைந்தார். இதையடுத்து அவர் உமாராணி தன்னுடன் வாழ வராவிட்டாலும் பரவாயில்லை, இளைய மகனை தன்னிடம் கொடுத்து விடுமாறு பலமுறை கேட்டு உள்ளார். ஆனால் உமாராணி மகனை தந்தையுடன் அனுப்ப மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.
செங்கல்லால் தாக்கி கொலை
இந்த நிலையில் நேற்று இரவு 9 மணியளவில் மீண்டும் தனது மகனை தன்னுடன் அனுப்புமாறு கேட்க மனைவியின் வீட்டுக்கு நடராஜ் சென்றுள்ளார். அப்போது மீண்டும் அவர்கள் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த நடராஜ் அங்கு கிடந்த செங்கல்லை எடுத்து மனைவியின் தலையில் ஓங்கி அடித்தார்.
இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த உமாராணி சம்பவ இடத்திலேேய ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். இதைபார்த்து பயந்து போன நடராஜ் உடனே குமாரபாளையம் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். மேலும் நடந்த சம்பவங்களை அவர் போலீசாரிடம் கூறினார்.
கைது
உடனே குமாரபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உமாராணியின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக குமாரபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நடராஜை கைது செய்து நடத்தி வருகின்றனர்.
குமாரபாளையத்தில் மனைவியை கல்லால் தாக்கிய கொன்ற கூலித்தொழிலாளி கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.