கன்னியாகுமரி
தனக்கு தெரியாமல் நகையை மனைவி அடகு வைத்ததால் கொத்தனார் தற்கொலை மார்த்தாண்டம் அருகே விபரீதம்
|மார்த்தாண்டம் அருகே தனக்கு தெரியாமல் மனைவி நகையை அடகு வைத்ததால் கொத்தனார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
குழித்துறை:
மார்த்தாண்டம் அருகே தனக்கு தெரியாமல் மனைவி நகையை அடகு வைத்ததால் கொத்தனார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சோக சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
கொத்தனார்
மார்த்தாண்டம் அருகே உள்ள கோட்டகம் மேலன்விளையை சேர்ந்தவர் பிரேம்குமார் (வயது 41), கொத்தனார். இவருக்கு சபிதா (30) என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு சபிதா தனது தாலிச்சங்கிலியை கணவருக்கு தெரியாமல் தாயாரிடம் அடகு வைக்க கொடுத்துள்ளார். இதுபற்றி பிரேம்குமாருக்கு தெரியவந்ததும் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று வழக்கம் போல் காலையில் பிரேம்குமார் வேலைக்கு சென்றார். ஆனால் அதன் பிறகு இரவு வெகுநேரமாகியும் வீட்டுக்கு திரும்பவில்லை.
தற்கொலை
இந்தநிலையில் அவர் வீட்டின் பக்கத்தில் உள்ள ஒரு ரப்பர் தோட்டத்தில் தூக்கில் பிணமாக தொங்கினார். இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து சபிதாவுக்கு தெரிவித்தனர். சபிதா ஓடிச் சென்று கணவரின் உடலை பார்த்து கதறி அழுதார். இதுபற்றி தகவல் அறிந்ததும் மார்த்தாண்டம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பிரேம்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மனைவி தனக்கு தெரியாமல் நகையை அடகு வைத்ததால் கொத்தனார் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.