கடலூர்
ஒரேநாளில் 6 இடங்களில் கைவரிசை:மளிகை கடைகள் பூட்டை உடைத்து ரூ.90 ஆயிரம் கொள்ளைகடலூரில் முகமூடி கொள்ளையர்கள் அட்டகாசம்
|கடலூரில் ஒரே நாளில் 6 இடங்களில் முகமூடி கொள்ளையர்கள் கைவரிசை காட்டி உள்ளனர். இதில், மளிகை கடைகளில் இருந்து ரூ.90 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றனர்.
கடலூர் கோண்டூர் ஜெயாநகரை சேர்ந்த பெண் போலீஸ் ஏட்டு பார்வதி வீட்டில் கடந்த 24-ந்தேதி மதியம் மர்ம நபர்கள் பின்பக்க கதவு பூட்டை உடைத்து 18 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றனர். அதன்பிறகு மஞ்சக்குப்பம் சுதர்சனம் தெருவில் மளிகை கடை பூட்டை உடைத்து ரூ.20 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டது.
கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகில் உள்ள ஆனைக்குப்பம் முத்துமாரியம்மன் கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை என அடுத்தடுத்து கொள்ளை சம்பவம் நடந்து வருகிறது. இந்த கொள்ளை சம்பவம் பற்றி கடலூர் புதுநகர் போலீசார் விசாரித்து வருகின்றனர். ஆனால் இது வரை குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.
இதற்கிடையே மீண்டும் அடுத்தடுத்து கடலூர் மாநகர பகுதியில் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது மேலும், மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இது பற்றிய விவரம் வருமாறு:-
பூட்டு உடைப்பு
கடலூர் பாதிரிக்குப்பம் சுதாகர்நகரை சேர்ந்தவர் முருகன் (வயது 49). இவர் திருப்பாதிரிப்புலியூர் பான்பரி மார்க்கெட்டில் மளிகை கடை வைத்துள்ளார். நேற்று காலை அவர் கடையை திறப்பதற்காக வந்த போது, கடையின் ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கடைக்குள் சென்று பார்த்தார். அங்கே கடையில் இருந்த ரூ.30 ஆயிரத்தை காணவில்லை. இதை மர்ம நபர்கள் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து கொள்ளையடித்து சென்றது தெரிந்தது.
இதேபோல் அங்கு மளிகை கடை வைத்திருக்கும் கூத்தப்பாக்கம் சகாயராஜ் (36), குமாரப்பேட்டை நடராஜன் (51) ஆகிய 2 பேரின் கடை பூட்டையும் உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், அங்கு பணம் எதுவும் கிடைக்காததால் திரும்பிச்சென்று விட்டனர்.
ரூ.90 ஆயிரம் கொள்ளை
கடலூர் வண்டிப்பாளையத்தில் மளிகை கடை வைத்திருக்கும் காசிராஜன் நேற்று முன் தினம் இரவு வியாபாரத்தை முடித்து விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று காலை கடையை திறக்க வந்த போது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கடையின் உள்ளே சென்று பார்த்த போது, கல்லாப்பெட்டியில் வைத்திருந்த ரூ.30 ஆயிரத்தை காணவில்லை.
கடலூர் வசந்தராயன்பாளையத்தில் உள்ள சாந்தினி மளிகை கடையிலும் மர்ம நபர்கள் பூட்டை உடைத்து உள்ளே சென்று ரூ 30 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர். கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள பிரிட்ஜ் பழுது பார்க்கும் கடை பூட்டை உடைத்து திருட முயற்சி செய்தனர்.
இதை அந்த வழியாக ரோந்து சென்ற போலீசார் பார்த்து, சத்தம் போட்டதும் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர். அடுத்தடுத்து 3 கடைகளில் நடந்த கொள்ளையில் ரூ.90 ஆயிரம் கொள்ளை போனது. 3 கடைகளில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது. இது பற்றி கடை உரிமையாளர்கள் கடலூர் திருப்பாதிரிப்புலியூர், முதுநகர், புதுநகர் ஆகிய போலீஸ் நிலையங்களில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவம் நடந்த கடைகளுக்கு சென்று விசாரணை நடத்தினர்.
மோப்பநாய்
மேலும் கொள்ளை நடந்த கடைகளுக்கு மோப்பநாய் கூப்பர் வரவழைக்கப்பட்டது. அந்த மோப்பநாய் கடைகளில் இருந்து சிறிது தூரம் ஓடி நின்று விட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. மேலும் கைரேகை நிபுணர்களும் முக்கிய தடயங்களை சேகரித்தனர். வண்டிப்பாளையத்தில் உள்ள மளிகை கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் சோதனை செய்ததில், 2 மர்ம நபர்கள் முகமூடி அணிந்தபடி பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பணத்தை கொள்ளையடித்து சென்றது பதிவாகி உள்ளது.
இந்த காட்சியை வைத்து போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர். முகமூடி அணிந்த நபர்கள் தான் அனைத்து இடங்களிலும் அடுத்தடுத்து கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.
ஒரே நாளில் 6 இடங்களில் சம்பவம்
இருப்பினும் கடலூர் மாநகர பகுதியில் அடுத்தடுத்து 3 கடைகளில் கொள்ளை, 3 கடைகளில் கொள்ளை முயற்சி சம்பவம் நடந்துள்ளது. மூகமுடி கொள்ளையர்களின் தொடர் அட்டகாசம், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. குற்றவாளிகளை விரைந்து பிடிக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.