< Back
மாநில செய்திகள்
குறைந்து வரும் கொரோனா தொற்று:  முககவசம் அணிவது அவசியமா? கட்டாயமா?  நாமக்கல் மாவட்ட மக்கள் கருத்து
நாமக்கல்
மாநில செய்திகள்

குறைந்து வரும் கொரோனா தொற்று: முககவசம் அணிவது அவசியமா? கட்டாயமா? நாமக்கல் மாவட்ட மக்கள் கருத்து

தினத்தந்தி
|
22 Oct 2022 12:15 AM IST

குறைந்து வரும் கொரோனா தொற்று: முககவசம் அணிவது அவசியமா? கட்டாயமா? நாமக்கல் மாவட்ட மக்கள் கருத்து

தமிழகத்தில் கடந்த 2020-ம்‌ ஆண்டு கொரோனா வைரசின் தாக்கம் ஏற்பட தொடங்கியது. பின்னர் படிப்படியாக பாதிப்புகள் அதிகரித்து உயிர் சேதங்களும் ஏற்பட்டன. கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்து கொள்ள கிருமிநாசினிகளை பயன்படுத்துதல், முககவசங்களை அணிதல் மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் என பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது.

குறிப்பாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் அதிகரித்த காலங்களில் 2 முககவசங்களை அணிந்து வெளியே நடமாட செல்ல டாக்டர்களால் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்காதவர்களுக்கு அபராதம் விதிக்கவும் அரசு தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனால் பொதுமக்களில் சிலர் பாதுகாப்பு கருதியும், சிலர் அபராதத்திற்கு பயந்தும் முககவசங்களை அணிந்து வந்தனர். தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து இருந்தாலும் எச்-1, என்-1 இன்புளுயன்சா வைரஸ் தாக்கத்தில் இருந்து தற்காத்து கொள்ள முககவசம் அணிவது அவசியமாக கூறப்படுகிறது.

பரவாமல் பாதுகாக்கும்

ஆனால் அதை பொருட்படுத்தாமல் ஏராளமான பொதுமக்கள் முககவசங்களை அணியாமல் அலட்சியமாக நடமாடுகின்றனர். இவ்வாறு நடமாடுபவர்கள் கர்ப்பிணிகள், குழந்தைகள், முதியோர்கள் மற்றும் உடல்நலம் பாதித்தவர்களாக இருந்தால் அவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது.நாமக்கல் மாவட்டத்தில் முககவசம் அணிபவர்கள் அணியாதவர்களின் கருத்துகளை பார்ப்போம்.

நாமக்கல் கணேசபுரத்தை சேர்ந்த கலையரசி:- கொரோனா நோய் கிருமிகள் நமது வாய் மற்றும் மூக்கு வழியாக உள்ளே செல்லாமல் இருப்பதற்காக சுகாதாரத்துறை முககவசம் அணிய வேண்டும் என கூறியது. நாமும் அதை பின்பற்றி முககவசம் அணிந்தோம். அணியாத நபர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது. ஆனால் தற்போது கொரோனாவின் தாக்கம் வெகுவாக குறைந்து விட்டது. எனவே தற்போது எப்போது பார்த்தாலும் முககவசம் அணிந்து இருக்க வேண்டியது இல்லை.

ஆனால் வெளியில் கூட்டமான பகுதிக்கு சென்றால் முககவசம் அணிந்து கொள்வது நோய் பரவாமல் இருக்க உதவும். மேலும் தூசி, இதர நோய் கிருமிகளிடம் இருந்து நம்மை காக்க உதவும். அத்துடன் முககவசம் அணிவது நம்மிடம் இருந்து கிருமிகள் நமது வீட்டில் உள்ள பெரியவர்களுக்கு பரவாமலும் பாதுகாக்கும். முககவசம் அணிந்து கொண்டே இருப்பதால் மூச்சு விடுவதில் சிரமம் இருக்கும். அதை பொருட்படுத்தாமல் முககவசம் அணிந்தால் கொடிய நோய் கிருமிகளிடம் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ளலாம்.

மாசடைந்த காற்று

நாமக்கல் சாமியப்பன் தோட்டதை சேர்ந்த குமார்:- கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்ததன் காரணமாக முககவசம் அணியாமல் ஏராளமானோர் நடமாடுகின்றனர். அதனால் கூட்ட நெரிசல் இடங்களில் செல்லும்போது, அச்சத்தோடு செல்ல வேண்டிய நிலை உள்ளது. ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தவர்களுக்கு அந்த அச்சம் அதிகமாகவே இருக்கும். அதற்கான சிகிச்சை செலவு, உடல் நலத்திலான பாதிப்பு ஆகியவை அதற்கு முக்கிய காரணமாகும். எனவே கொரோனா முழுமையாக கட்டுப்படுத்தப்படும் வரை முககவசங்களை தவிர்க்காமல் இருப்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட பாதுகாப்புக்கு உறுதுணையாக இருக்கும். மேலும் சாலை போக்குவரத்தின் போது மாசடைந்த காற்றில் இருந்து தற்காத்து கொள்ளவும் முககவசங்கள் உதவுகிறது.

பன்றிக்காய்ச்சல்

நாமக்கல் மாவட்ட பா.ஜ.க. நிர்வாகி சத்தியபானு:- தனிப்பட்ட விதத்தில் முககவசங்களை அணிவது எனக்கு சிரமமாக உள்ளது. நீண்ட நேரம் அதை அணிந்திருக்க முடியவில்லை. ஆனால் நோய் பாதிப்புகளை கையாள முககவசங்களை அணிவதை தவிர வேறு வழி இல்லை. அதனால் கூட்டம் அதிகமாக உள்ள இடங்களில் செல்லும்போது மட்டும் முககவசங்களை அணிந்து கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரியின் டீன் சாந்தா அருள்மொழி கூறியதாவது:- கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்ததன் காரணமாக அனைவருக்கும் பயம் போய்விட்டது. பெரும்பாலானோர் முககவசங்களை அணிவதில்லை. ஆனால் பன்றி காய்ச்சல் பாதிப்பு வருகிறது. பாதிப்பு குறைவாக இருந்தாலும் கர்ப்பிணிகள், முதியோர்கள் மற்றும் உடல்நலம் பாதித்தவர்களுக்கு பாதிப்பு கடுமையாக உள்ளது. எனவே முககவசங்களை அணிவது பாதுகாப்பை உறுதி செய்யும். அதேபோல் தீபாவளி பண்டிகை காலமாக உள்ளதால் கூட்ட நெரிசல்களில் செல்வதை தவிர்க்க வேண்டும். அல்லது அவ்வாறு செல்பவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்