மதுரை
மீண்டும் முககவசம் அணிவது அவசியம்
|மதுரையில் நாளுக்கு நாள் காய்ச்சல் அதிகம் பரவுவதை தொடர்ந்து, மீண்டும் முககவசம் அணிவது அவசியம் என அரசு டாக்டர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
மதுரையில் நாளுக்கு நாள் காய்ச்சல் அதிகம் பரவுவதை தொடர்ந்து, மீண்டும் முககவசம் அணிவது அவசியம் என அரசு டாக்டர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
காய்ச்சல் அதிகரிப்பு
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக காய்ச்சல் அதிக அளவில் பரவி வருகிறது. தினந்தோறும் காய்ச்சலால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை அதிகமாகி கொண்டே இருக்கிறது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக, தமிழகம் முழுவதும் நேற்று ஆயிரம் இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடந்தன.
மதுரையிலும் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் சிறப்பு முகாம்கள் நடந்தது. குறிப்பாக கிராமப்புறங்களில் இந்த முகாம்கள் அதிக அளவில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் மருத்துவ குழுவினர் பல்வேறு இடங்களுக்கு நேரில் சென்று, காய்ச்சல் பரிசோதனை செய்தனர்.
மதுரை அரசு ஆஸ்பத்திரியிலும் நாளுக்குநாள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு வரும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. அவர்களுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு குழு தயார் நிலையில் உள்ளது. இதுபோல், 24 மணி நேரமும் டாக்டர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
பரிசோதனை
இதுகுறித்து அரசு டாக்டர்கள் கூறுகையில், "தமிழகத்தில் கடந்த சில தினங்களாக காய்ச்சல் அதிக அளவில் பரவி வருகிறது. குறிப்பாக குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படு கிறார்கள். இதனை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அரசு ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகளுக்கும் காய்ச்சல் பரிசோதனை செய்யப்படுகிறது.
அதிக அளவு காய்ச்சல் இருக்கும்பட்சத்தில் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்கள். குழந்தை களுக்கு காய்ச்சல், இருமல் இருந்தால் அவர்களை பள்ளிக்கு அனுப்பாமல் இருப்பது நல்லது. பள்ளி குழந்தைகளிடம் இருந்து தான் வீட்டில் உள்ளவர்களுக்கும் காய்ச்சல் பரவி வருகிறது.
ஒத்துழைப்பு
அதுமட்டுமின்றி கொரோனா காலகட்டத்தில் கடைபிடித்ததுபோல் மீண்டும் அனைவரும் முககவசம் அணிய வேண்டும். முககவசம் அணிவதன் மூலம் நோய் பரவல் கட்டுப்படுத்தப்படும். பொது இடங்களுக்கு செல்லும்போது முககவசம் மட்டுமே நோய் பரவலை தடுக்கும் முக்கிய காரணியாகும். மருத்துவத்துறையினருடன், மக்களும் முக கவசம் அணிந்து ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்" என்றனர்.