திண்டுக்கல்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
|பழனியில், போலீஸ் இன்ஸ்பெக்டரை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய 86 பேரை கைது செய்ய முயன்றபோது போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
ஆர்ப்பாட்டம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பழனி நகர், ஒன்றியக்குழு சார்பில், பழனி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டரை கண்டித்து நேற்று பழனி குளத்து ரவுண்டானா பகுதியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜமாணிக்கம் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம், மாவட்ட செயலாளர் சச்சிதானந்தம், நகர செயலாளர் கந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தின்போது, கட்சி நிர்வாகிகள் மீது வழக்குபோடுவதை கண்டித்து இன்ஸ்பெக்டருக்கு எதிராக கோஷம் எழுப்பினர். இதற்கிடையே பழனி போலீஸ் துணை சூப்பிரண்டு சரவணன் தலைமையிலான போலீசார் அங்கு வந்தனர்.
தள்ளுமுள்ளு
பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகளிடம், அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் செய்யக்கூடாது, மீறினால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவுறுத்தினர். ஆனால் கட்சியினர் தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எனவே போலீசார் ஆர்ப்பாட்டம் செய்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகளை குண்டுக்கட்டாக தூக்கி வேனில் ஏற்றினர். அப்போது போலீசாருக்கும், கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
பின்னர் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் செய்ததாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் 86 பேரை கைது செய்து தாராபுரம் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். பிறகு மாலையில் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். பழனி குளத்து ரவுண்டானா பகுதியில் போலீசார்-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் இடையே நடந்த தள்ளுமுள்ளு சம்பவம் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.