கரூர்
தியாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்ய வேண்டும்: கலெக்டர் அறிவுறுத்தல்
|சுதந்திர தினத்தை முன்னிட்டு சுதந்திரத்திற்காக பாடுபட்ட தியாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்ய வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.
சுதந்திர தினம்
கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைத்து துறை அலுவலர்களால் மேற்கொள்ளப்படும் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தலைமை தாங்கி பேசினர். அப்போது அவர் கூறியதாவது:-
இந்திய திருநாட்டின் சுதந்திர தினத்தை கொண்டாடும் அதே வேளையில், சுதந்திரத்திற்காக பாடுபட்ட தியாகிகளுக்கு கவுரவம் செய்யும் வகையில் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து, சிறப்பு செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். விழா நடைபெறும் மைதானத்தை தூய்மைப்படுத்திடவும், விழா நாளில் வருகைதரும் அனைவருக்கும் போதிய குடிநீர் மற்றும் கழிவறை வசதிகளை மேற்கொள்ளவும் கரூர் மாநகராட்சி ஆணையர் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அணிவகுப்பு மற்றும் கலை நிகழ்ச்சிகளில் பங்குபெறும் மாணவ, மாணவிகளுக்கு உரிய சிற்றுண்டிகள் வழங்கப்பட வேண்டும்.
கூடுதல் பஸ்கள்
விழா நடைபெறும் நாளில் தீ தடுப்பு நடவடிக்கையாக தீயணைப்பு வாகனத்தை மைதானத்திறக்கு அருகில் தயார்நிலையில் வைத்திட வேண்டும். உரிய மருந்து பொருட்களுடன் நடமாடும் மருத்துவ குழுக்களும், 108 வாகனமும் இருக்கும் வகையில் சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தோட்டக்கலைத்துறையினர் அலங்கார செடிகள் அமைக்க வேண்டும். விழா நடைபெறும் மைதானத்திற்கு பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகள் வந்து செல்ல ஏதுவாக கரூர் பஸ் நிலையத்தில் இருந்து மாவட்ட விளையாட்டு மைதானம் வரை பஸ்கள் கூடுதலாக இயக்கிட போக்குவரத்துத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். நமது நாட்டின் சுதந்திர தின விழாவை சீரும் சிறப்புமாக கொண்டாடிடும் வகையில் அனைவரும் தங்களது ஒத்துழைப்பினை வழங்கவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.