குடும்ப ஓய்வூதியம் கேட்டு தியாகியின் மகள் கொடுத்த மனுவை பரிசீலிக்க வேண்டும் - சென்னை ஐகோர்ட்டு
|குடும்ப ஓய்வூதியம் கேட்டு தியாகியின் மகள் கொடுத்த மனுவை பரிசீலிக்க வேண்டும் என கோவை கலெக்டருக்கு, சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
கோவையைச் சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர் நாராயணன் நம்பியார், தியாகிகள் ஓய்வூதியம் பெற்று வந்த நிலையில், 1992-ம் ஆண்டு மரணமடைந்தார். அதன் பின் அவரது மனைவி கல்யாணியம்மா, தியாகிகள் குடும்ப ஓய்வூதியம் பெற்று வந்தார். அவரும்,
கடந்த 1995-ம் ஆண்டு அவரும் இறந்தார். இதையடுத்து, அவர்களது ஒரே வாரிசான மகள் வல்சலா, தியாகிகளுக்கான குடும்ப ஓய்வூதியத்தை தனக்கு வழங்கக் கோரி தமிழ்நாடு அரசுக்கு மனு கொடுத்தார். அந்த மனு பரிசீலிக்கப்படாததால், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
அதில், "என் கணவரின் வருமானத்தை நம்பியே வாழ்ந்து வந்தேன். கடந்த 2011-ம் ஆண்டு அவர் இறந்து விட்டார். தற்போது வருமானம் இல்லாம் சிரமப்படுகிறேன். என் தந்தைக்கு நான் ஒரே வாரிசு. எனவே, தியாகிகள் குடும்ப ஓய்வூதியம் வழங்க உத்தரவிட வேண்டும்" என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அப்துல் குத்தூஸ், "மனுதாரரின் கோரிக்கை மனுவை சட்டப்படி பரிசீலிப்பதால் எந்த பாரபட்சமும் ஏற்பட்டு விடாது. எனவே, 8 வாரத்துக்குள் மனுதாரரின் மனுவை கோவை கலெக்டர் பரிசீலிக்க வேண்டும். அவர் ஓய்வூதியம் பெற தகுதியானவர் என்றால், ஓய்வூதியம் வழங்க அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும். இந்த மனுவை முடித்துவைக்கிறேன்" என்று உத்தரவிட்டுள்ளார்.