ராமநாதபுரம்
தியாகி இமானுவேல்சேகரன் நினைவு நாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும்-பரமக்குடியில் கையெழுத்து இயக்கம் தொடங்கியது
|தியாகி இமானுவேல்சேகரன் நினைவு நாளை அரசு விழாவாக அறிவிக்கக்கோரி பரமக்குடியில் கையெழுத்து இயக்கம் தொடங்கியது.
பரமக்குடி,
பரமக்குடியில் மக்கள் விடுதலை கட்சியின் சார்பில் தியாகி இமானுவேல் சேகரனின் நூற்றாண்டை கொண்டாடும் நிலையில் அவரது நினைவு நாளை அரசு விழாவாக அறிவிக்க வலியுறுத்தியும், மதுரை - விரகனூர் சுற்றுச்சாலை சந்திப்பில் அவருக்கு முழு உருவ வெண்கலச் சிலை அமைத்திடவும் பொதுமக்களிடம் கையெழுத்தைப் பெற்று அதை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை மனுவாக ஒப்படைக்கப்படுகிறது. அதை தொடர்ந்து அந்த கையெழுத்து இயக்கம் பரமக்குடியில் தொடங்கியது.
அதற்கு கட்சியின் தலைவர் முன்னாள் எம்.எல்.ஏ. முருகவேல் ராஜன் தலைமை தாங்கினார். மாநில துணை பொதுச்செயலாளர் நாகராஜ் பாண்டியன், ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் வையமுத்து, மாவட்ட தலைவர் நாகசாமி, மாவட்ட பொருளாளர் பொன்னுச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மனிதநேய மக்கள் கட்சியின் எம்.எல்.ஏ.அப்துல் சமது, மாநில துணை பொதுச்செயலாளர் சலிபுல்லாகான் ஆகியோர் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தனர். இதில் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பின்பு முருகவேல்ராஜன் நிருபர்களிடம் கூறும் போது:-
தியாகி இமானுவேல்சேகரன் நினைவு நாளை அரசு விழாவாக அறிவிக்க கோரி 10 லட்சம் பேரிடம் கையெழுத்து பெற்று அதை தமிழக முதல்-அமைச்சரிடம் ஒப்படைக்க உள்ளோம். அதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் எங்கள் கோரிக்கையை நிறைவேற்றுவார் என நம்புகிறோம். பட்டியல் இன வெளியேற்றத்தை நாங்கள் எதிர்க்கவும் இல்லை. ஏற்கவும் இல்லை என்றார்.