< Back
மாநில செய்திகள்
அடுத்த வாரம் திருமணம்... மணப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை.. கிணற்றில் குதித்த காதலன்
மாநில செய்திகள்

அடுத்த வாரம் திருமணம்... மணப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை.. கிணற்றில் குதித்த காதலன்

தினத்தந்தி
|
3 July 2024 7:13 AM IST

காதலி தற்கொலை செய்து கொண்டதால் அருகில் உள்ள கிணற்றில் காதலன் குதித்தார்.

`வேலூர்,

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் அன்பு, அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு ஒரு மகள், 2 மகன்கள். மகள் இந்துபிரியா (வயது 25), பி.ஏ., பி.எட். படித்துள்ளார். அதே கிராமத்தைச் சேர்ந்த பாண்டியன் மகன் மணிமேகன் (27), எம்.ஏ., பி.எட். படித்துள்ளார். இருவரும் காதலித்து வந்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து இருதரப்பு பெற்றோர் சம்மதத்தின் பேரில் வருகிற 10-ந் தேதி இருவருக்கும் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டது. அன்று காலையில் பள்ளிகொண்டா ரங்கநாதர் கோவிலில் திருமணமும், மாலையில் பாக்கம் கிராமம் அருகே உள்ள திருமண மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சியும் நடத்த முடிவு செய்யப்பட்டு திருமண பத்திரிகை அச்சடிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து மணமக்களின் பெற்றோர்கள் திருமண பத்திரிகையை உறவினர்களுக்கு வழங்கி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை வீட்டில் இருந்த இந்துபிரியா திடீரென தனது வீட்டின் அருகே உள்ள தோட்டத்து பக்கம் சென்று வருவதாக வீட்டில் உள்ளவர்களிடம் தெரிவித்துவிட்டு சென்றுள்ளார். அதன் பின்னர் அவர் வீட்டிற்கு வரவில்லை. இதனையடுத்து பெற்றோர் தோட்டத்து பக்கம் சென்று பார்த்தபோது அருகில் உள்ள வயலில் உள்ள மரத்தில் துப்பட்டாவால் அவர் தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த மணிமேகன் தன் காதலி தற்கொலை செய்து கொண்டதை பார்த்ததும் வாழ்வதைவிட சாவதே மேல் என கூறி, அருகில் உள்ள கிணற்றில் குதித்தார். இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் உடனடியாக கிணற்றில் குதித்து மணிமேகனை உயிருடன் மீட்டனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த தற்கொலை சம்பவம் குறித்து பாக்கம் கிராம நிர்வாக அலுவலர் வெங்கடாஜலபதி பரதராமி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் கே.வி.குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நிர்மலா, பரதராமி சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமார் உள்ளிட்ட போலீசார் பாக்கம் கிராமத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

மேலும் இந்துபிரியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்துபிரியா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணம் நடைபெற ஒரு வாரமே இருந்த நிலையில் மணப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

மேலும் செய்திகள்