வழக்கறிஞர் முன்னிலையில் சுயமரியாதை திருமணம் - பார் கவுன்சில் மூலம் நோட்டீஸ் அனுப்ப மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவு
|சான்றளித்த வழக்கறிஞர் உள்ளிட்டோருக்கு தமிழ்நாடு பார் கவுன்சில் தரப்பில் நோட்டீஸ் அனுப்பி விளக்கம் பெற நீதிபதி உத்தரவிட்டார்.
மதுரை,
ராமநாதபுரம் மாவட்டம் மோர்பண்ணையைச் சேர்ந்த இளவரசன் என்பவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் கடந்த மாதம் தனது காதலியை இருவீட்டாரின் எதிர்ப்பையும் மீறி சுயமரியாதை திருமணம் செய்து கொண்டதாகவும், தனது மனைவியை அவரது உறவினர்கள் கடத்திச் சென்றதாகவும் தெரிவித்திருந்தார்.
மேலும் வழக்கறிஞர் முன்னிலையில் நடந்த இந்த திருமணத்திற்கு வழக்கறிஞர் சான்றிதழ் அளித்ததாகவும், தனது மனைவியை மீட்டுத் தர வலியுறுத்தியும் மனுதாரர் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கறிஞர் முன்னிலையில் நடைபெறும் திருமணம் செல்லாது என ஐகோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்ட நிலையில், சுயமரியாதை திருமணம் தனது முன்னிலையில் நடந்ததாக சான்றளித்த வழக்கறிஞர் உள்ளிட்டோருக்கு தமிழ்நாடு பார் கவுன்சில் தரப்பில் நோட்டீஸ் அனுப்பி விளக்கம் பெற உத்தரவிட்டார்.