< Back
மாநில செய்திகள்
ஓரிரு நாட்களில் திருமணம்... ஓரினச்சேர்க்கை ஆசையால் விபரீதம்: தடம்மாறி சென்ற ஐ.டி.ஊழியர்
மாநில செய்திகள்

ஓரிரு நாட்களில் திருமணம்... ஓரினச்சேர்க்கை ஆசையால் விபரீதம்: தடம்மாறி சென்ற ஐ.டி.ஊழியர்

தினத்தந்தி
|
17 April 2024 7:56 AM IST

ஆபாச செயலி மூலம், ஓரினச்சேர்க்கை ஆசையால் ஐ.டி.ஊழியருக்கு விபரீதம் நேர்ந்தது.

கோவை,

கோவையை அடுத்த கீரணத்தம் ஊராட்சி பகுதியைச் சேர்ந்த இவர், அந்த பகுதியில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் ஆபாச செயலியில் ஓரினச்சேர்க்கையில் விருப்பம் உள்ளவர்களிடம் சாட்டிங் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட தவறான எண்ணத்தால், சமீபத்தில் அறிமுகமான வாலிபர் ஒருவருடன் தனிமையில் இருக்க விரும்பியுள்ளார்.

இதனால் அந்த வாலிபரை சரவணம்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பின்புறம் புதர் அருகே வருமாறு செல்போனில் அழைத்தார். அந்த வாலிபரும் அவரது அழைப்புக்கு இணங்கி வருவதாக கூறினார். இதனால் இருவரும் முடிவு செய்தபடி அந்த இடத்துக்கு சென்றனர். அங்கு இருவரும் இணைந்திருக்க நினைத்த தருணத்தில், திடீரென அங்குள்ள புதர் மறைவில் இருந்து மற்றொரு வாலிபர் வில்லனாக வந்தார். இதனை சற்றும் எதிர்பார்க்காத அந்த ஐ.டி.ஊழியரான வாலிபர் அதிர்ந்து போய் அகன்று நின்றார்.

அப்புறம்தான் தெரிந்தது, அழைப்புக்கு வந்த வாலிபரும், புதர்மறைவில் இருந்து புறப்பட்டு வந்த வாலிபரும் கூட்டாளிகள் என்று. இருவரும் சேர்ந்து அந்த ஐ.டி ஊழியரை தாக்கினர். அதனை ஐ.டி.ஊழியரால் தாக்கு பிடிக்க முடியவில்லை. அத்துடன் அவர்கள் நிறுத்தவில்லை. அவர்களது ஒரே குறிக்கோள் பணம் என்பதால், அதனை குறிவைத்து அவர்கள் இருவரது மிரட்டலும் தொடர்ந்தது.

அதற்கு ஐ.டி ஊழியர் ஆடிப்போனவராய் தன்னிடம், பணம் இல்லை என்றதும் அவரின் ஆடைகளை அகற்றிவிட்டு செல்போனை பறித்துச் சென்றனர். ஐ.டி. ஊழியர் நிர்வாண கோலத்தில் நிலை குலைந்து போனார். தனக்கு இதுதேவைதானா? என்று யோசித்து பார்த்து தன்னை நொந்து கொண்டார். இருந்தாலும் தவறான தடம்நோக்கி போகும் போது தலை கவிழ்ந்துதானே ஆக வேண்டும் என்பதை அவரது மனச்சாட்சி பேசியது. தலை தப்பியது தம்பிரான் புண்ணியம் என்று அங்கிருந்து வந்து விட்டார்.

இதுகுறித்து அந்த ஐ.டி ஊழியர் சரவணம்பட்டி போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் சரவணம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் ஐ.டி ஊழியருக்கு இன்னும் ஓரிரு நாட்களில் திருமணம் நடக்க இருப்பதும், இந்நிலையில் ஆபாச செயலி மூலம், ஓரினச்சேர்க்கை ஆசையால் விபரீதத்தில் சிக்கி, தாக்குதலுக்கு உள்ளானதும் தெரியவந்தது.

ஓரிருநாட்களில் திருமணம் நடக்க இருந்த நிலையில் ஓரின சேர்க்கை என்கிற தவறான நடத்தையை நோக்கி நடைபோட்ட ஐ.டி. ஊழியருக்கு நிகழ்ந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்