< Back
மாநில செய்திகள்
கற்குவேல் அய்யனார் கோவிலுக்கு சொந்தமான இடங்களில் திருமண மண்டபம் - அமைச்சர் சேகர்பாபு தகவல்
மாநில செய்திகள்

கற்குவேல் அய்யனார் கோவிலுக்கு சொந்தமான இடங்களில் திருமண மண்டபம் - அமைச்சர் சேகர்பாபு தகவல்

தினத்தந்தி
|
1 Sept 2022 3:07 PM IST

கற்குவேல் அய்யனார் கோவிலுக்கு சொந்தமான இடங்களில் திருமண மண்டபம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

உடன்குடி,

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் காயாமொழி அருகே உள்ளது தேரிக்குடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோவில். கற்குவேல் அய்யனார் கோவில் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழா கடந்த 29-ந்தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.

தொடர்ந்து மாலை ஹாசங்கரணம், தாமிரபரணி நதியில் இருந்து புனித நீர் எடுத்து வருதல், பிரவேசபலி தீபாராதனை, 30-ந்தேதி காலை 8 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, நவகிரக சாந்தி ஹோமம், சுதர்சன ஹோமம், அஷ்டலட்சுமி ஹோமம், தன பூஜை, கோ பூஜை, ரக்‌ஷா பந்தனம், முதல்கால யாக சாலை பூஜை நடந்தது. நேற்று காலை 2-ம் கால பூஜையை தொடர்ந்து பரிவார தெய்வங்களுக்கு அஷ்டபந்தன மருந்து சாத்துதல், மாலை 3-ம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது.

இந்நிலையில் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு பூர்ணாஹீத், 4-ம் கால யாகசாலை பூஜை நடந்தது. தொடர்ந்து காலை 9 மணிக்கு யாகசாலை பூஜையில் இருந்து புனிதநீர் எடுத்துச் சென்று விமானம் மற்றும் மூலவர் பரிவாரமூர்த்திகளுக்கு அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு, மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-

கற்குவேல் அய்யனார் கோவிலுக்கு சொந்தமாக 132 ஏக்கர் நிலங்கள் உள்ளது. இந்த இடங்களில் திருமண மண்டபங்கள், பக்தர்கள் தங்கும் அறை உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் செய்து தருமாறு பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக முதல்-அமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து காலை 11 மணிக்கு மகா அபிஷேகமும் பிற்பகல் 1 மணிக்கு அலங்கார தீபாராதனை மகேஸ்வர பூஜை நடந்தது. மாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜை, 7 மணிக்கு மாவிளக்கு பூஜை, 8 மணிக்கு குதிரை வாகனத்தில் சுவாமி எழுந்தருளி பவனி வருதல் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் அஜித், ஆய்வாளர் பகவதி, செயல் அலுவலர் காந்திமதி மற்றும் ஆலய ஊழியர்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்