தர்மபுரி
மொரப்பூரில் அறநிலையத்துறைதிருமண மண்டபத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த கோரிக்கை
|மொரப்பூரில் உள்ள அறநிலைத்துறை திருமண மண்டபத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி பராமரிக்க வேண்டும் என்று சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.
மொரப்பூர்:
மொரப்பூரில் உள்ள அறநிலைத்துறை திருமண மண்டபத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி பராமரிக்க வேண்டும் என்று சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.
திருமண மண்டபம்
தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் அருகே நடுப்பட்டியில் பழமை வாய்ந்த சிங்காரத்தோப்பு முனீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, சேலம், நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலுக்கு சொந்தமாக மொரப்பூரில் திருமண மண்டபம் 2001- ம் ஆண்டில் கட்டப்பட்டது. இந்த மண்டபம் நீண்ட காலமாக பயன்படுத்தப்படாமல் இருந்தது.
விரிவு படுத்தப்படவில்லை
பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்ததின் பேரில் கடந்த 2017- ம் ஆண்டு இந்த திருமண மண்டபம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வந்தது. ஏழை, எளிய மக்கள், நடுத்தர மக்கள் என பலரும் குறைந்த வாடகையில் தங்கள் குடும்ப நிகழ்ச்சிகளை நடத்த இந்த மண்டபத்தை பயன்படுத்தி வருகிறார்கள்.
இந்த திருமண மண்டபத்தில் உணவு சாப்பிடும் கூடம், கழிவறைகள்ஆகியவை இங்கு வந்து செல்லும் பொதுமக்களின் தேவைக்கு ஏற்ப விரிவுபடுத்தப்படவில்லை.இதனால் இந்த மண்டபத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.
சீரமைக்க வேண்டும்
இதுதொடர்பாக பொதுமக்கள் தரப்பில் கூறியதாவது-
மொரப்பூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பல்வேறு கிராமங்களில் ஏழை, நடுத்தர குடும்பங்களை சேர்ந்தவர்கள் அதிக அளவில் வசித்து வருகிறார்கள். தங்கள் வீட்டுசுப நிகழ்ச்சிகளை அதிக செலவு செய்து பெரிய திருமண மண்டபங்களில் நடத்த முடியாதவர்களுக்கு இங்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கட்டப்பட்டுள்ள திருமண மண்டபம் வரப்பிரசாதமாக உள்ளது.
இந்த மண்டபத்தில் நடைபெறும் விசேஷ நிகழ்சிகளுக்கு அதிக அளவில் பொதுமக்கள் வந்து செல்கிறார்கள். ஆனால் இந்த மண்டபத்தில் சமையல் செய்வதற்கு போதுமான கட்டிட வசதி இல்லை. இதேபோல் உணவு சாப்பிடும் கூடம் தேவைக்கு ஏற்ப மேம்படுத்தப்படவில்லை. இதனால் இங்கு சுப நிகழ்ச்சிகளை நடத்துபவர்கள் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். இந்த மண்டபத்தின் ஜன்னல் கண்ணாடிகள் ஆங்காங்கே உடைந்தும், முறையான பராமரிப்பின் காணப்படுகின்றன. கழிப்பறை கதவுகள் உடைக்கப்பட்டு இருப்பதால் போதிய பாதுகாப்பு இன்றி காணப்படுகிறது. திருமண மண்டபத்தில் முகப்பில் சுற்றுச் சுவர் இல்லாததால் இரவு நேரங்களில் பலர் இந்த மண்டப வளாகத்தில் மது அருந்துதல் போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். இத்தகைய செயல்பாடுகளை தவிர்க்க திருமண மண்டபத்தின் முகப்பில் சுற்றுச்சுவர் அமைத்து பாதுகாப்பை மேம்படுத்த வேண்டும். இங்கு கூடுதலாக உணவருந்தும் கூடம் அமைக்கவும், அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், இங்குள்ள கழிவறைகளை சுகாதாரமாக பராமரிக்கவும் தேவையான சீரமைப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.