விருதுநகர்
ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் மர்மசாவு
|நரிக்குடி அருகே ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் மர்மமான முறையில் இறந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரியாபட்டி,
நரிக்குடி அருகே ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் மர்மமான முறையில் இறந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஊராட்சி மன்ற தலைவி
நரிக்குடி அருகே பூம்பிடாகை ஊராட்சி மன்றத்தலைவராக இருந்து வருபவர் நிரஞ்சனா (வயது 31). இவரது கணவர் பெரியசாமி (40). கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரவு மோட்டார் சைக்கிளில் வெளியே சென்ற இவர் வீடு திரும்பவில்லை. இவரை உறவினரின் வீடுகள் மற்றும் பக்கத்து ஊர்களில் தேடி கொண்டு இருந்தனர்.
இந்நிலையில் பூம்பிடாகை வயல் பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் பெரியசாமி பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அ.முக்குளம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தனர்.
மர்மசாவு
அப்போது மர்மமான முறையில் இறந்து கிடந்தது பெரியசாமி என்பது தெரியவந்தது. மேலும் அவரது உடல் வீங்கிய நிலையில் இருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த திருச்சுழி துணை போலீஸ் சூப்பிரண்டு மதியழகன், நரிக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமநாராயணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இதையடுத்து பெரியசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். பெரியசாமி எப்படி இறந்தார்? என்பது குறித்து அ.முக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.