நாமக்கல்
ஆடி அமாவாசையையொட்டிராசிபுரம் உழவர் சந்தையில் ரூ.9½ லட்சத்துக்கு காய்கறி விற்பனை
|ராசிபுரம்:
ஆடி அமாவாசையையொட்டி ராசிபுரம் உழவர் சந்தையில் ரூ.9½ லட்சத்துக்கு காய்கறி விற்பனையானது.
உழவர் சந்தை
ராசிபுரம் உழவர் சந்தையில் ஆடி அமாவாசையை முன்னிட்டு நேற்று காய்கறி வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. முள்ளுக்குறிச்சி, மெட்டாலா, ஓசக்கரையான் புதூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் தாங்கள் விளைவித்த காய்கறி, கீரை மற்றும் பழ வகைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
1,214 விவசாயிகள் உழவர் சந்தை அடையாள அட்டையை பெற்றுள்ளனர். இதன்படி 216 விவசாயிகள் 25 டன் 240 கிலோ காய்கறி, கீரை வகைகள், பழங்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. 6 ஆயிரத்து 310 நுகர்வோர் வந்திருந்து காய்கறிகளை வாங்கி சென்றனர்.
வெங்காயம் ரூ.130
இதையடுத்து நடந்த சந்தையில் ரூ.9 லட்சத்து 51 ஆயிரத்து 850-க்கு காய்கறி விற்பனையானது. இதில் ஒரு கிலோ தக்காளி ரூ.100-க்கும், ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.130-க்கும், ஒரு கிலோ அவரைக்காய் ரூ.65 முதல் ரூ.75-க்கும், ஒரு கிலோ பீர்க்கங்காய் ரூ.50-க்கும், பீன்ஸ் ரூ.105-க்கும், கேரட் ரூ.70-க்கும், பச்சை மிளகாய் ரூ.80-க்கும் விற்பனையானது.
இதற்கிடையே மாவட்டத்தில் உள்ள நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு, குமாரபாளையம், பரமத்திவேலூர், மோகனூர் உள்பட 6 உழவர் சந்தைகளில் நேற்று 86.69 டன் காய்கறி ரூ.31 லட்சத்து 70 ஆயிரத்துக்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கது.