கடலூர்
மாரியம்மன் கோவில் பூட்டை உடைத்து ரூ.6 லட்சம் நகை கொள்ளை
|குறிஞ்சிப்பாடியில் மாரியம்மன் கோவில் பூட்டை உடைத்து ரூ.6 லட்சம் மதிப்புள்ள நகையை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
குறிஞ்சிப்பாடி,
குறிஞ்சிப்பாடி விழப்பள்ளம் பகுதியில் செங்கழனி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் பூசாரி பஞ்சநாதன் (வயது 55) என்பவர் நேற்று முன்தினம் மாலை வழக்கம் போல் பூஜையை முடித்து கோவிலை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். பின்னா், நேற்று காலை 7 மணிக்கு கோவிலுக்கு வந்தபோது, கோவில் முன்பக்க இரும்புக்கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதில் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு அம்மன் கழுத்தில் கிடந்த 14 பவுன் நகை, 40 கிராம் வெள்ளி பொருட்கள் மற்றும் உண்டியல் உடைக்கப்பட்டு, அதிலிருந்த பணம் ஆகியவற்றை காணவில்லை. அதனை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிந்தது. உண்டியலில் ரூ.2 ஆயிரம் இருந்து இருக்கும் என கூறப்படுகிறது.
ரூ.6 லட்சம்
இதுபற்றி தகவல் அறிந்த குறிஞ்சிப்பாடி சப்-இன்ஸ்பெக்டர் பிரசன்னா தலைமையிலான போலீசார் கோவிலுக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில் பூசாரி கோவிலை பூட்டிவிட்டு சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள், கோவிலுக்குள் புகுந்து ரூ.6 லட்சம் மதிப்புள்ள நகையை கொள்ளையடித்து சென்றது தெரிந்தது. இதையடுத்து கடலூரில் இருந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டது.
வலைவீச்சு
அது கொள்ளை நடந்த கோவிலில் இருந்து மோப்பம் பிடித்தபடி சிறது தூரம் ஓடிச்சென்று நின்றது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இதுகுறித்து கோவில் நிா்வாகி சேகர்(62) கொடுத்த புகாரின்பேரில், குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.