< Back
மாநில செய்திகள்
மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா
கரூர்
மாநில செய்திகள்

மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா

தினத்தந்தி
|
11 April 2023 6:48 PM GMT

தளவாபாளையம் மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

தீமிதி திருவிழா

கரூர் மாவட்டம், தளவாபாளையத்தில் உள்ள மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு கடந்த 2-ந் தேதி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி தீர்த்தக் குடங்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, மேள தாளங்கள் முழங்க கோவிலை வந்தடைந்தனர்.

அதனை தொடர்ந்து இரவு மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து கம்பம் நடும் நிகழ்ச்சியும், பூச்சூட்டுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றன. கடந்த 9-ந் தேதி இரவு வடிசோறு நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று முன்தினம் இரவு தீமிதி திருவிழா நடைபெற்றது. இதையொட்டி மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

நேர்த்திக்கடன் செலுத்தினர்

தொடர்ந்து பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி கோவில் முன்பு அமைக்கப்பட்டு இருந்த தீக்குண்டத்தில் ஆண் பக்தர்கள் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். அதேபோல் பெண் பக்தர்களுக்கு தீ வாரி போட்டு நேர்த்திக்கடன் செலுத்தப்பட்டது. நேற்று அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், விபூதி, தேன், கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

மாலை சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து அம்மன் முன் படையல் போட்டு பொங்கல் பூஜை செய்தனர். அதனை தொடர்ந்து பெண்கள் ஊர்வலமாக மாவிளக்கை கொண்டுவந்து, அம்மன் வளாகத்தில் வைத்து மாவிளக்கு பூஜை செய்தனர். அதனை தொடர்ந்து வாணவேடிக்கை நடைபெற்றது. இன்று (புதன்கிழமை) காலை கம்பம் பிடுங்கி காவிரி ஆற்றில் விடும் நிகழ்ச்சியும், நாளை (வியாழக்கிழமை) மதியம் மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்