மதுரை
காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
|உசிலம்பட்டி நகராட்சி பகுதியில் முறையாக குடிநீர் வழங்காததை கண்டித்து காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
உசிலம்பட்டி,
உசிலம்பட்டி நகராட்சி பகுதியில் முறையாக குடிநீர் வழங்காததை கண்டித்து காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
குடிநீர்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட 6-வது வார்டு சத்யா நகர் பகுதியில் கடந்த ஒரு மாத காலமாக முறையாக குடிநீர் வழங்கவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் நகராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளவில்லையாம்.
இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் மதுரை-தேனி தேசிய நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடு பட்டனர். தகவல் அறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன் மற்றும் நகர் மன்ற உறுப்பினர் பூமாராஜா உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடு பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
உறுதி
தகவல் அறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி நகர் போலீஸ் நிலைய போலீசார் மற்றும் நகராட்சி அதிகாரிகள் போராட் டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் உரிய நடவடிக்கை எடுத்து முறையாக குடிநீர் வழங்கப்படும் என உறுதிஅளித்ததை அடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.