< Back
மாநில செய்திகள்
குடும்பத் தகராறில் மெரினா கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண்
சென்னை
மாநில செய்திகள்

குடும்பத் தகராறில் மெரினா கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண்

தினத்தந்தி
|
25 Dec 2022 3:29 PM IST

குடும்பத் தகராறில் சென்னை மெரினா கடலில் குதித்து தற்கொலை செய்ய முயன்ற ராதா என்ற பெண்ணை, மெரினா உயிர்காக்கும் படைவீரர்கள் பத்திரமாக மீட்டனர்.

சென்னை பட்டரவாக்கம் அய்யப்பன் தெருவைச் சேர்ந்தவர் ராதா (வயது 53). இவருடைய கணவர் சுப்பிரமணி. இருவருக்கும் திருமணமாகி 24 ஆண்டுகள் ஆகிறது. ராதா மட்டும் நேற்று சென்னை மெரினா கடற்கரைக்கு தனியாக வந்தார். அவர் தீடீரென கடலுக்குள் இறங்கி தற்கொலை செய்ய முயன்றார். சிறிது நேரத்தில் கடலில் தத்தளித்து கொண்டிருந்த ராதாவை கண்டு அருகே இருந்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டனர்.

உடனடியாக அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மெரினா உயிர் காக்கும் படை வீரர்கள் வெங்கட் பிரசாத் மற்றும் பிரேம்குமார் ஆகியோர் துரிதமாக செயல்பட்டு கடலில் குதித்து தத்தளித்துக் கொண்டிருந்த ராதாவை பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து அண்ணா சதுக்கம் போலீஸ் நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து அண்ணா சதுக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய முதல் கட்ட விசாரணையில், கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டு அது தகராறாக மாறியுள்ளது தெரிந்தது. இதில் மனம் உடைந்த ராதா, தற்கொலை செய்ய முடிவெடுத்து மெரினா கடலில் குதித்தது தெரியவந்தது. போலீசார் ராதாவின் குடும்பத்தினரை வரவழைத்து, அவரை சமாதானப்படுத்தி குடும்பத்தாருடன் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் மெரினா கடற்கரை பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

மேலும் செய்திகள்